ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஆடவர் குண்டு எறிதல் F46 பிரிவில் இந்திய வீரர்கள் தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று பதக்கங்களையும் கைப்பற்றி அசத்தியுள்ளனர். இந்திய வீரர் சச்சின் கிலாரி தனது முதல் முயற்சியிலேயே 15.79 மீட்டர் தூரம் எறிந்து சாதனை படைத்து தங்கப் பதக்கத்தை வென்றார். முகமது யாசர் 15.06 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தையும், பிரவீன் 13.83 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த சச்சின் கிலாரி, பாரா தடகளத்தில் ஏற்கெனவே சர்வதேச அளவில் புகழ்பெற்ற வீரர். ஒன்பது வயதில் ஏற்பட்ட சைக்கிள் விபத்தால் அவரது இடது கையின் இயக்கம் பாதிக்கப்பட்டது. இருப்பினும், விளையாட்டின் மீதான ஆர்வத்தைக் கைவிடாத அவர், ஆரம்பத்தில் ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்றார். பின்னர் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக குண்டு எறிதல் போட்டிக்கு மாறினார்.
2024-ம் ஆண்டு பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் ஆடவர் குண்டு எறிதலில் 16.32 மீட்டர் தூரம் எறிந்து ஆசிய சாதனையுடன் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இதுதவிர, 2023 மற்றும் 2024-ம் ஆண்டுகளில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் தொடர்ந்து இரண்டு முறை தங்கம் வென்று சாதனை படைத்தார். ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியிலும் தங்கப் பதக்கத்தை வென்றார். பயிற்சியாளர் சத்யநாராயணா வழிகாட்டுதலில் பயிற்சி பெற்று வரும் சச்சின் கிலாரிக்கு, இந்தியாவின் டார்கெட் ஒலிம்பிக் போடியம் திட்டத்தின் கீழ் ஆதரவு வழங்கப்படுகிறது. அவரது சாதனைகளைப் பாராட்டி 2024-ம் ஆண்டு அர்ஜுனா விருதும் வழங்கப்பட்டது.
2026-ம் ஆண்டு ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இந்தியா தொடக்கத்திலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. சச்சின் கிலாரி வென்ற தங்கப் பதக்கம், இந்தியாவின் தங்கப் பதக்க எண்ணிக்கையை 12 ஆக உயர்த்தியது. இதன் மூலம் இந்தியாவின் ஒட்டுமொத்த பதக்க எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இந்தியா 29 தங்கம், 31 வெள்ளி, 51 வெண்கலம் என மொத்தம் 111 பதக்கங்களைக் குவித்தது. இதற்கு முன்பு 2018-ம் ஆண்டு ஜகார்த்தா போட்டியில் இந்தியா வென்ற 72 பதக்கங்களே அதிகபட்சமாக இருந்தன. ஹாங்சோவில் 111 பதக்கங்களை வென்றதன் மூலம் இந்தியா தனது முந்தைய சாதனையை முறியடித்து, பதக்கப் பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தது.
தற்போதைய போட்டியிலும் இந்திய வீரர்கள் பதக்க வேட்டையைத் தொடர்ந்து வரும் நிலையில், கடந்த முறை படைத்த 111 பதக்கங்கள் என்ற சாதனையை இந்த முறையும் எட்டுவார்களா என்ற எதிர்பார்ப்பு விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
Also Read:
மாதம் ரூ.1,000 முதலீடு.. ரூ.9 லட்சம் வருமானம்! கூட்டு வட்டியின் மாயாஜாலம்! லட்சாதிபதி ஆகும் ரகசியம்!



