மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒன்பது முக்கிய துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்த இந்த வானிலை அமைப்பு, இன்று அடுத்தடுத்த நிலைகளில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின்னர் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாற உள்ளது. இதன் தொடர்ச்சியாக நாளை திங்கட்கிழமை வாக்கில் இது புதிய புயலாக உருவெடுக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் தொடர்ந்து மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து மேலும் வலுவடைந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வழியாக ஆந்திர கடலோர பகுதிக்கு அருகே எதிர்வரும் 28-ஆம் தேதி புதன்கிழமை காலையில் கரையை கடக்க கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. கடல் பகுதியில் மணிக்கு பலத்த வேகத்தில் சூறைக்காற்று வீசி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், தூத்துக்குடி, பாம்பன், நாகை ஆகிய தமிழக துறைமுகங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களிலும் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொதுவாக புயல் காலங்களில் துறைமுகங்களில் 1 முதல் 11 வரையிலான எச்சரிக்கை கூண்டுகள் அடையாளமாக ஏற்றப்படுவது வழக்கம். பகல் நேரங்களில் மூங்கில் தட்டைகளால் ஆன கூண்டுகளும், இரவு நேரங்களில் பிரத்யேக வண்ண ஒளி விளக்குகளும் பயன்படுத்தப்படும். இதில் 1-ஆம் எண் கூண்டு என்பது புயல் உருவாகக்கூடிய சாதகமான வானிலை சூழல் நிலவுகிறது என்பதையும், துறைமுகங்களுக்கு நேரடி பாதிப்பு இன்றி அப்பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதையும் குறிக்கும் என வானிலை துறை விளக்கியுள்ளது.
Read More : இன்று எங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்? 31 மாவட்டங்களுக்கு வானிலை மையம் வார்னிங்!



