உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவளிக்கும் அகிலாண்டேஸ்வரரான சிவபெருமானுக்கு நன்றி செலுத்தும் விதமாக, ஆண்டுதோறும் ஐப்பசி மாத பௌர்ணமி நன்னாளில் சிவாலயங்களில் அன்னாபிஷேகப் பெருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டில் ஐப்பசி மாத பௌர்ணமி தினமான இன்று, தமிழகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் மாலையில் சாயரட்சை பூஜையின்போது சிவலிங்கத் திருமேனிக்கு பால், தயிர், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு, புதிதாக வடித்த அன்னத்தால் காப்பு கட்டப்பட்டு அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது.
சந்திரன் தனது சாபங்கள் நீங்கி பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவு பெறும் நாளாக இந்த ஐப்பசி பௌர்ணமி போற்றப்படுகிறது. சந்திரனுக்குரிய தானியமான அரிசியால் ஈசனுக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதன் மூலம், ஜாதகத்தில் உள்ள சந்திர தோஷங்கள் நீங்கி மன அமைதியும் நினைவாற்றலும் பெருகும் என்பது ஐதீகம். நிலத்தில் விளைந்து, நீரில் வெந்து, தீயின் துணை கொண்டு தயாராகும் அன்னமானது பஞ்சபூதங்களின் தத்துவத்தை உணர்த்துவதுடன், அன்னாபிஷேகம் கண்ட ஒரு சோற்றுப் பருக்கையானது ஒரு சிவலிங்கத்திற்கு இணையாகக் கருதப்படுகிறது. எனவே, இந்நாளில் சிவலிங்கத்தை தரிசிப்பது கோடி சிவலிங்கங்களை ஒரே நேரத்தில் தரிசித்த பெரும் புண்ணியத்தை வழங்கும் என ஆன்மீகப் பெரியோர்கள் கூறுகின்றனர்.
பூஜைக்குப் பின் சிவலிங்கத்தின் மீது சாற்றப்பட்ட அன்னமானது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுவதுடன், மீதமுள்ள அன்னம் நீர்நிலைகளில் வாழும் நீர்வாழ் உயிரினங்களுக்கும் உணவாக கரைக்கப்படுகிறது. குடும்பத்தில் உணவுப் பஞ்சம் நீங்கி வளம் பெருகவும், விவசாயம் செழிக்கவும் இந்த வழிபாடு வழிகோலுகிறது. தமிழகத்தில் தஞ்சை பெரிய கோவில், கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் சிதம்பரம் நடராஜர் ஆலயம் உள்ளிட்ட புகழ்பெற்ற திருத்தலங்களில் டன் கணக்கிலான அரிசியை கொண்டு நடைபெறும் அன்னாபிஷேகம் உலகப் புகழ்பெற்றதாகும்.
Read More : Sunday அதுவுமா இப்படியா? மீண்டும் எகிறியது வெங்காயம் விலை! ஒரு கிலோ டாப் ரேட்!



