பெற்றோர்களே கவனம்! கழுத்தை இறுக்கி விளையாடிய சிறுவர்கள்.. துடிதுடித்து பலியான 7 வயது சிறுவன்!

8f443cc2d1dc7bb84a9b9ad29be62eb2ad742df8c3266750bcee087f565094b4

விளையாட்டு என நினைத்த விபரீதம்.. 7 வயது சிறுவனின் உயிரைப் பறித்த சம்பவம் மேலூர் அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகன் செய்த செயலால் சிறுவன் உயிரிழந்த நிலையில், உண்மையை மறைக்க முயன்றதாக மற்றொரு சிறாரின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.


மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள தனியாமங்கலத்தைச் சேர்ந்த பெரியகருப்பன் – சத்யா தம்பதியின் மகன் முத்துவேல். ஏழு வயதான இச்சிறுவன் கடந்த 25ஆம் தேதி திடீரென மாயமானதால் குடும்பத்தினர் பதற்றமடைந்தனர். உறவினர்கள் பல இடங்களில் தேடியும் சிறுவன் கிடைக்காததால் காவல்துறையை நாடினர்.

சிறுவனை மீட்கும் முயற்சியில் 90 காவலர்கள் அடங்கிய ஐந்து தனிப்படைகள் களமிறக்கப்பட்டன. அப்பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டதுடன், ட்ரோன் மூலமாகவும் தேடுதல் நடத்தப்பட்டது. இறுதியில், மறுநாள் காலை பாழடைந்த வீடு ஒன்றில் முத்துவேலின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

சிறுவனின் மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அதிர்ச்சியளிக்கும் தகவல் கிடைத்தது. முத்துவேலும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு சிறாரும், கழுத்தை இறுக்கினால் மயக்கம் ஏற்பட்டு, முதுகில் தட்டினால் மீண்டும் எழுந்துவிடலாம் என்ற தவறான புரிதலுடன் விளையாடி வந்துள்ளனர். சம்பவத்தன்றும் இருவரும் கோயில் அருகே இதே விளையாட்டில் ஈடுபட்டபோது, முத்துவேலுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல என்றும், ஆபத்தை உணராத சிறுவர்களின் விளையாட்டு துயரத்தில் முடிந்ததாகவும் விசாரணை காட்டுகிறது. ஆனால், முத்துவேல் உயிரிழந்ததை அறிந்த மற்றொரு சிறாரின் தாய் சந்தியா, உடனடியாக காவல்துறைக்குத் தகவல் அளிக்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தனது மகனைப் பாதுகாக்கும் நோக்கில், முத்துவேலின் உடலைப் பாழடைந்த வீட்டில் மறைத்து வைத்ததாகவும் அவர் மீது புகார் எழுந்தது.

இதையடுத்து சந்தியாவைக் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினர். சம்பந்தப்பட்ட சிறார் தொடர்பாக இளஞ்சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முத்துவேலின் உடலில் கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட பாதிப்பைத் தவிர வேறு வெளிப்புறக் காயங்கள் இல்லை என முதற்கட்ட உடற்கூறாய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.

குழந்தைகள் விளையாட்டாகச் செய்யும் சில செயல்கள்கூட உயிருக்கு ஆபத்தாக மாறக்கூடும் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது. எனவே, குழந்தைகள் என்ன விளையாடுகிறார்கள், அந்த விளையாட்டில் ஆபத்து இருக்கிறதா என்பதைக் கவனித்து, அவர்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனக் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

Also Read: சிறையில் இருந்து கைதிகள் தப்பினால் இனி இது தான் தண்டனை! 15 ஆண்டுகளுக்குப் பிறகு அதிரடி மாற்றம்..

Saranya

Next Post

கேக் வாங்கிக் கொடுத்த உறவினர் முதல் குடும்பத்தினர் வரை.. சிறுமி மாயமான வழக்கில் தீவிர விசாரணை!

Wed Oct 28 , 2026
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமான வழக்கில், விசாரணையை சிபிசிஐடி தீவிரப்படுத்தியுள்ளது. பிறந்தநாள் கொண்டாடிய சில மணி நேரங்களிலேயே வீட்டிலிருந்து காணாமல் போன ஹேமலதா எங்கு சென்றார் என்பது 15 நாட்களைக் கடந்தும் தெரியாததால், பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் தடயங்களைத் தேடி வருகின்றனர். ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு – பவானி தம்பதியின் மகள் ஹேமலதா. கடந்த அக்டோபர் 11ஆம் தேதி சிறுமிக்கு ஏழாவது பிறந்தநாள். […]
WhatsApp Image 2026 10 17 at 7.45.43 AM 1

You May Like