தேசிய கல்வி நிறுவன தரவரிசைக் கட்டமைப்பின் தரவரிசையில் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம்.
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), மத்திய அரசின் கல்வி அமைச்சகம் அறிவிக்கும் தேசிய கல்வி நிறுவன தரவரிசைக் கட்டமைப்பின் தரவரிசையில் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், 9-வது ஆண்டுக்கான தேசிய கல்வி நிறுவன தரவரிசை முடிவுகளை டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிவித்து பரிசுகளையும் வழங்கினார்.
இந்தியக் கல்வி வரலாற்றில் இதுவரை கண்டிராத சாதனையாக, சென்னை ஐஐடி ‘ஒட்டுமொத்த’ பிரிவில் தொடர்ந்து 6-வது ஆண்டாக முதலிடத்தைத் பிடித்திருப்பதுடன், 2016-ல் தரவரிசை வெளியிடத் தொடங்கியது முதல் கடந்த 9 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக ‘பொறியியல்’ பிரிவிலும் முதலிடத்திலேயே நீடித்து வருகிறது.
ஆராய்ச்சி நிறுவனங்கள்’ பிரிவுக்கான தரவரிசையில் கடந்த ஆண்டு இரண்டாம் இடத்தில் இருந்த சென்னை ஐஐடி தற்போது முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. ‘கண்டுபிடிப்புகள்’ பிரிவில் (கண்டுபிடிப்பு சாதனைகளுக்கான கல்வி நிறுவனங்களின் அடல் தரவரிசை என்ற பெயரில் இருந்தது) முந்தைய ஆண்டில் இரண்டாம் இடத்திலிருந்து தற்போது முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இதற்கான விருதுகளை சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி நேரில் பெற்றுக் கொண்டார்.