ஈட்டன் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே, 200 கோடி ரூபாய் முதலீட்டில், 500 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் ஒப்பந்தம்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் சான்பிரான்சிஸ்கோவில் 29.8.2024 அன்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்ட்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் 4,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.
30.8.2024 அன்று ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்ததோடு, கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
31.8.2024 அன்று ஓமியம் நிறுவனத்துடன் எலக்ட்ரோலைசலர்கள் உற்பத்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் துறையில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டன. அதனைத் தொடர்ந்து, 3.9.2024 அன்று அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரில் ஈட்டன் நிறுவனத்துடன் முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.
ஈட்டன் கார்ப்பரேஷன் (Eaton Corporation) நிறுவனம் என்பது தரவு மையம், பயன்பாடு, தொழில்துறை, வணிகம், இயந்திர கட்டிடம், குடியிருப்பு, விண்வெளி மற்றும் இயக்க சந்தைகளுக்கான உற்பத்தி மற்றும் பகிர்மான பணிகளை மேற்கொள்ளும் மேலாண்மை நிறுவனமாகும். குடியிருப்பு, வணிக கட்டிடம், மின்சார வாகனங்கள், தரவு மையம் மற்றும் eVTOL வாகனங்களுக்கான ஆற்றல் உற்பத்தி, பரிமாற்றம், விநியோகம் மற்றும் நுகர்வுக்கு அவற்றின் தயாரிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்நிறுவனத்தின் தலைமையகங்கள் அயர்லாந்து (Ireland) நாட்டின் டப்ளின் (Dublin) மற்றும் அமெரிக்க நாட்டின் ஓஹியோவின் (Ohio) பீச்வுட் (Beachwood) ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. உலகளவில் 35 நாடுகளில் சுமார் 208 இடங்களில் உற்பத்தி வசதிகள் கொண்ட பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகும். முதலமைச்சர் முன்னிலையில், ஈட்டன் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே, 200 கோடி ரூபாய் முதலீட்டில், 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் தற்போதுள்ள ஈட்டன் நிறுவனத்தின் உற்பத்தி வசதியை விரிவாக்குவதுடன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உலகளாவிய பயன்பாட்டு பொறியியல் மையத்தை (Global Utility Engineering Centre) நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.