fbpx

அசத்தல் அறிவிப்பு…! கலைஞர் கனவு இல்லம் திட்டத்திற்கு ரூ.500 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு…!

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு கூடுதலாக ரூ.500 கோடியை விடுவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இத்திட்டத்திற்கு இதுவரை ரூ.2,125 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது 1 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு வருவதாகவும் அரசு விளக்கம் அளித்துள்ளது.

கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின்கீழ் 2024-25 ம் ஆண்டில் ஒரு லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்ட ஒரு வீட்டுக்கு ரூ.3.50 லட்சம் வீதம் ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீட்டுக்கு ஏற்கனவே அனுமதி ஆணை வழங்கப்பட்டுள்ளது. தமிழக கிராமப்புற பகுதிகளில் ஏறத்தாழ 8 லட்சம் குடிசை வீடுகள் உள்ளதாக அனைவருக்கும் வீடு என்ற திட்ட கணக்கெடுப்பின் வழியாக கண்டறியப்பட்டது. இதன் அடிப்படையில் ’குடிசையில்லா தமிழகம்’ என்ற இலக்கை அடையும் பொருட்டு, வரும் 2030-ம் ஆண்டுக்குள் ஊரக பகுதிகளில் 6 ஆண்டுகளில் 8 லட்சம் வீடுகள் புதிதாக கட்டித்தர அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி நடப்பு நிதியாண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீட்டின் பரப்பளவு, சமையலறை உட்பட, 360 சதுர அடியாகும். பயனாளிகளின் நிதிச்சுமையை குறைக்கும் பொருட்டு இத்திட்டத்தின் கீழ் டான்செம் சிமெண்ட் மற்றும் இரும்பு கம்பிகள் குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்பட்டு துறை மூலம் வழங்கப்படுகிறது.

வீட்டின் கட்டுமானத்துக்கு ஏற்ப தரைமட்ட நிலை, ஜன்னல்மட்ட நிலை, கூரை வேயப்பட்ட நிலை மற்றும் பணிமுடிவுற்ற பின் என 4 தவணைகளில் ஒற்றை ஒருங்கிணைப்பு வங்கி கணக்கின் (SNA) மூலம் தொகை நேரடியாக பயனாளிகளுக்கு விடுவிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு இதுவரை ரூ.2,125 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்பொழுது கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு கூடுதலாக ரூ.500 கோடியை விடுவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

English Summary

Additional funding of Rs. 500 crore allocated for the Kalaignar Kanavu Illam project

Vignesh

Next Post

சட்டம் இயற்றப்படும் வரை லைவ்-இன்-ரிலேஷன்ஷிப் பதிவு செய்யப்பட வேண்டும்!. நீதிமன்றம் அதிரடி!

Thu Jan 30 , 2025
Live-in-relationships must be registered until the law is passed!. Court action!

You May Like