fbpx

கருப்பு பெயின்ட் டப்பாவோட முடிஞ்சா ED & வருமான வரி ஆபீஸ் வாங்க.‌‌..! திமுகவுக்கு அண்ணாமலை கொடுத்த சவால்…!

கருப்பு பெயின்ட் டப்பாவுடன் திரியும் கும்பல், அப்படியே அமலாக்கத்துறை இயக்குநரகம் மற்றும் வருமான வரி அலுவலகத்திற்கும் செல்லுங்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “புதிய தேசிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழிக் கொள்கையை, இந்தித் திணிப்பு என்று கூறி, சில நபர்கள், இந்தி எழுத்துக்களை அழிக்கிறோம் என்று கருப்பு பெயின்ட் டப்பாவைத் தூக்கிக் கொண்டுச் சுற்றித் திரிவதைக் காண நேர்கிறது. பல ஆண்டு காலமாகத் தமிழ்நாட்டில் செய்து வரும் அதே மொழி அரசியலை, தமிழநாட்டில் பெருகிவரும் போதைப் பொருள் புழக்கம், பாலியல் குற்றங்கள், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, வேலைவாய்ப்பின்மை, அரசு ஊழியர்கள், காவலர்களுக்கே பாதுகாப்பில்லாத நிலை என ஒட்டு மொத்த நிர்வாகத் தோல்வியையும் மடைமாற்ற மீண்டும் கையில் எடுத்திருக்கிறது அரசு.

கருப்பு பெயின்ட் டப்பாவுடன் திரியும் கும்பல், அப்படியே அமலாக்கத்துறை இயக்குநரகம் மற்றும் வருமான வரி அலுவலகத்திற்கும் செல்லுமாறு நாங்கள் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இந்த அலுவலகங்களின் முகவரிகளை, அடிக்கடி அங்கு செல்லும் அமைச்சர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.திமுகவினர் தங்கள் குடும்பங்களுக்கு ஒரு நியாயம், தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு நியாயம் என்றே எப்போதும் நடந்து கொள்வார்கள். மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளைக் கற்றுக் கொடுக்கும் CBSE/மெட்ரிகுலேஷன் பள்ளிகளை நடத்துவார்கள் அல்லது தங்கள் குழந்தைகள், பேரக்குழந்தைகளை அத்தகைய பள்ளிகளில் சேர்த்துப் படிக்க வைப்பார்கள், தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்த்து விட்டு, அவர்கள் எதிர்காலம் நன்றாக இருப்பதை உறுதி செய்துவிட்டு, அரசுப் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான தவறான கருத்துக்களையும், பிரச்சாரத்தையும் பரப்புவார்கள்.

இதனை மக்கள் புரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக, இந்தித் திணிப்பு என்ற மாயையை உருவாக்கி, அதன் பின்னர் ஒளிந்து கொள்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். திமுகவின் இந்த அரசியலுக்குப் பலியானவர்கள் எத்தனை பேர். அவர்கள் குடும்பங்கள் இப்போது எங்கே, எப்படி, என்ன நிலையில் இருக்கின்றன என்பது தெரியுமா? திமுகவில் மேல்மட்ட அதிகாரத்தில் இருந்தவர்கள் யாராவது ஒருவர் மொழிப் போர் தியாகி ஆகியிருக்கிறாரா..? திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் எங்களின் சில கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும். திமுக அமைச்சர்கள் தொடங்கி கவுன்சிலர்கள் வரை, தங்கள் குழந்தைகளை 3 மொழிகள் அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகள் கற்பிக்கப்படும் தனியார் பள்ளிகளில் சேர்க்கும்போது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு ஏன் அந்த வாய்ப்பு வழங்கப்படுவதில்லை..?

திமுக தலைவர்களால் நடத்தப்படும் சிபிஎஸ்இ மெட்ரிகுலேஷன் பள்ளிகளில், மாணவர்களுக்கு இந்தி உள்ளிட்ட பிற இந்திய மொழிகள் மற்றும் சர்வதேச மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் மூன்றாவது மொழியைக் கற்கும் உரிமை ஏன் மறுக்கப்படுகிறது? கூடுதலாக ஒரு மொழியைக் கற்கும் உரிமை, தனியார் பள்ளிகளில் படிக்கும் வசதியான குடும்பக் குழந்தைகளுக்கு மட்டுமேயான ஒரு உரிமையா.? மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மும்மொழிக் கொள்கையில், இந்தி மொழி கட்டாயம் இல்லை என்றும், நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட பல மொழிகளில், இந்தியும் ஒரு விருப்ப மொழி மட்டுமே என்றும் பலமுறை தெளிவுபடுத்தியுள்ளார். தேசிய கல்விக் கொள்கை 2020-யிலும், இதுவே குறிப்பிடப்பட்டுள்ளது. திமுக ஏன் இந்தித் திணிப்பு என்று கூறி மக்களை குழப்புகிறது..?

கடந்த 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுக்கின்படி, தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, இந்தி, குஜராத்தி பேசும் மக்களின் எண்ணிக்கை, ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 11.65% தற்போது, இந்தியாவில் சுமார் 25க்கும் மேற்பட்ட மொழிகள், திராவிட மொழிகளாக வரையறுக்கப்பட்டுள்ளன. உங்கள் கட்சிக்கு திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெயர் வைத்துக் கொண்டு, கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட திராவிட மொழிகளில் ஒன்றை மூன்றாவது மொழியாகக் கற்கவிடாமல், தமிழக அரசுப் பள்ளி மாணவர்களை தடுப்பது ஏன்..?

திமுகவினரின் நிறுவனரான முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை மற்ற மாநிலங்களும் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால், தமிழ்நாடும் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறினாரே. அது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குத் தெரியுமா? தமிழைக் காப்பாற்றுகிறோம் என்று சொல்லும் உயர்நிலைப்பள்ளி அளவில் கடந்த 2017-18 ஆண்டுகளில், 51.34% ஆக இருந்த தமிழ் வழிக் கல்வி மாணவர்கள் விகிதம், தற்போது 2023 – 24 ஆண்டில், 44.35% ஆகக் குறைந்திருப்பதும், 54.16% ஆக இருந்த மேல்நிலைப் பள்ளி தமிழ் வழிக் கல்வி மாணவர்கள் விகிதம், தற்போது 44.7% ஆக குறைந்திருப்பதும் ஏன் என்று கூறுவாரா?

பொதுமக்கள் வரிப்பணத்தில் ஆண்டுக்கு சுமார் ரூ 44,000 கோடியை, பள்ளிக்கல்வித் துறைக்குச் செலவழித்துவிட்டு, திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்காக உழைத்துக் கொண்டிருக்கிறது திமுக. இரண்டு மொழிக் கொள்கை என்றால் தமிழ்நாட்டின் அனைத்துப் பள்ளிகளிலும் இரண்டு மொழி மட்டுமே பயிற்றுவிக்கப்பட வேண்டும். பணமிருந்தால் எத்தனை மொழிகள் வேண்டுமானாலும் படிக்கலாம். கொள்கை எல்லாம் அரசுப் பள்ளிகளில் படிக்கும் சாதாரண ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவ மாணவியருக்கு மட்டும்தான் என்ற திமுகவின் இரட்டை வேடம் இனியும் செல்லுபடியாகாது. திமுக இதற்குப் பின்னரும், இந்தி எதிர்ப்பு என்று கூறினால், தனது இந்தி கூட்டணிக் கட்சியினரையும் தமிழ்நாட்டுக்குக் கூட்டி வந்து, அவர்கள் கையிலும் கருப்பு பெயின்ட் டப்பாவைக் கொடுத்து தனது இந்தி எதிர்ப்பைக் காட்டட்டும் என தெரிவித்துள்ளார்.

English Summary

If you can’t finish with a can of black paint, buy the ED & Income Tax office…! Annamalai’s challenge to DMK

Vignesh

Next Post

தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில்... ஒரே நேரத்தில் பொருட்கள்...! அமைச்சர் அதிரடி உத்தரவு...!

Tue Feb 25 , 2025
Minister orders action in ration shops across Tamil Nadu... goods at the same time...!

You May Like