தேர்தல் கூட்டணி தொடர்பாக கருத்துக்களை ஊடகங்களில் யாரும் தெரிவிக்க கூடாது என எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தி உள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில், திமுக தனது கூட்டணியை தக்க வைத்து, தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகிறது. விசிக திமுக கூட்டணியில் இருந்து விலகிவிடுமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆனால், திமுக கூட்டணியில் தான் இருப்போம் என்பதை திருமாவளவன் தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகிறார்.
ஆனால், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, எந்த காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றே தொடர்ந்து தெரிவித்து வந்தார். ஆனால், கடந்த மார்ச் 25-ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி திடீரென டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். தமிழக நலனுக்காக சந்தித்ததாக அவர் கூறினாலும், கூட்டணி பேச்சுதான் என்பதை பாஜக தரப்பு உறுதிப்படுத்தியது.
சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் அமித் ஷாவை, அதிமுக தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, கே.பி. முனுசாமி உள்ளிட்ட தலைவர்கள் சந்தித்துப் பேசினர். அதிமுக -பாஜக மற்றும் பிற கட்சிகள் இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி 2026 சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் என அமித் ஷா அறிவித்தார். பாஜகவுடன் கூட்டணி வைத்த அதிமுகவை திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர். அதிமுகவின் தொண்டர்கள் மற்றும் தலைவர்களும் கூட்டணி தொடர்பான கருத்துக்களை பதிவு செய்து வருவது சர்ச்சைக்குரிய விஷயமாக மாறி வருகிறது.. கூட்டணி தொடர்பாக கருத்துக்களை ஊடகங்களில் யாரும் தெரிவிக்க கூடாது என எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தி உள்ளார்.
இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்; கழக நிறுவனத் தலைவர் ‘பொன்மனச் செம்மல்’ புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்., இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் காலந்தொட்டும்; நம் இருபெரும் தலைவர்களின் நல்லாசியோடு தொடர்ந்தும், ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ ஒரு கட்டுக்கோப்பான இயக்கமாக செயல்பட்டு வருகிறது என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள்.
கழகத்தின் முக்கிய முடிவுகள் மற்றும் நிலைப்பாடுகள் குறித்தான தகவல்களை, கழகத் தலைமை உரிய நேரத்தில், உரிய முறையில் அவ்வப்போது தெரிவிக்கும். ஆகவே, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகளும்; கழகத்தின் மீது பற்று கொண்டுள்ளவர்களும், கழகத்தின் நிலைப்பாடுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த எவ்வித கருத்துகளையும், கழகத் தலைமையின் அனுமதி பெறாமல், தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்கள், பத்திரிகைகள் மற்றும் இன்னபிற தகவல் தொடர்பு ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.