தமிழ்நாடு அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு, தவெக தலைவர் விஜய் தலைமையிலான புதிய அரசு இன்று தனது முதல் பெரிய சவாலை சந்திக்கிறது. தமிழக சட்டமன்றத்தில் இன்று (மே 13) காலை 9.30 மணிக்கு தவெக அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதனால் கடும் அரசியல் பரபரப்பு நிலவுகிறது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை பெற கூட்டணி கட்சிகளின் ஆதரவை விஜய் பெற்றார். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம் மற்றும் ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்தன. அதன் பின்னர், ஆளுநர் அல்ரேகரிடம் 120 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை சமர்ப்பித்து விஜய் முதலமைச்சராக கடந்த 10ஆம் தேதி பதவியேற்றார்.
தவெக கூட்டணியின் தற்போதைய பலம் என்ன?
தவெக – 107
காங்கிரஸ் – 5
விசிக – 2
சிபிஐ – 2
சிபிஎம் – 2
ஐயுஎம்எல் – 2
என மொத்தம் 120 எம்.எல்.ஏக்களின் ஆதரவு ஆளும் தரப்பிற்கு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாகவே அரசியல் சூழல் திடீர் திருப்பங்களை சந்தித்துள்ளது. திருப்பத்தூர் தொகுதியில் 1 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக எம்.எல்.ஏ சீனிவாச சேதுபதியின் வெற்றியை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன் படி, சம்பந்தப்பட்ட தவெக எம்.எல்.ஏ நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆளும் தரப்பின் எண்ணிக்கை 119 ஆக குறையும் சூழல் உருவாகியுள்ளது. இதற்கிடையில் மன்னார்குடி அமமுக எம்.எல்.ஏ காமராஜ் நேற்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜயை ஆதரித்து பேசியது அரசியல் வட்டாரங்களில் அதிர்வலை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
தற்போது சுயேச்சை எம்.எல்.ஏவாக செயல்பட உள்ள காமராஜ், நம்பிக்கை வாக்கெடுப்பிலும் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பார் என கூறப்படுகிறது. மறுபுறம் அதிமுகவில் C. V. சண்முகம் தலைமையிலான 30 எம்.எல்.ஏக்கள் விஜய் அரசுக்கு ஆதரவு அளிக்க போவதாக முன்னதாக தெரிவித்தனர். தற்போதைய அரசியல் கணக்குப்படி, கூட்டணி ஆதரவு மற்றும் வெளிப்புற ஆதரவுகளுடன் விஜய் தலைமையிலான தவெக அரசு பெரும்பான்மையை எளிதாக நிரூபிக்கும் என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
Read more: வாரத்திற்கு 4 நாட்கள் வேலை, தொடர்ந்து 3 நாட்கள் லீவு..! இப்படி ஒரு விதி இருப்பது தெரியுமா..?



