பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு விபத்தில் உதவி செய்ததன் மூலம் தொடங்கிய பழக்கம், பின்னர் காதல் உறவாக மாறிய நிலையில், அதே உறவு இறுதியில் கொலையில் முடிந்த சம்பவம் உடுமலை அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கை வாபஸ் பெற மறுத்த பெண்ணை, ஆத்திரமடைந்த முன்னாள் காதலன் வீட்டுக்குள் புகுந்து கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பாலப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பானுமதி (45). கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்த பானுமதி, மகளுடன் வசித்து வந்துள்ளார்.
ஒரு நாள் வேலை முடிந்து வீட்டுக்குச் செல்வதற்காக இந்திரா நகர் பேருந்து நிறுத்தத்தில் பானுமதி காத்திருந்தபோது, அவரது கண்முன்னே சாலை விபத்து ஒன்று நடந்துள்ளது. இதில் ஆனைமலை பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (39) என்பவர் படுகாயமடைந்தார். விபத்தில் காயமடைந்த பிரபாகரனை மீட்ட பானுமதி, அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைக்குத் தேவையான உதவிகளையும் செய்துள்ளார். இந்த சம்பவத்துக்குப் பிறகு இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நாளடைவில் இந்த பழக்கம் நெருக்கமான உறவாக மாறியுள்ளது.
பிரபாகரனும் தனது மனைவியை ஏற்கனவே பிரிந்திருந்த நிலையில், உடுமலையில் டீ மாஸ்டராக வேலை செய்து வந்துள்ளார். பின்னர் பானுமதியுடன் நெருக்கமாக பழகிய அவர், அவருக்கு அவ்வப்போது பண உதவியும் செய்து வந்ததாக கூறப்படுகிறது. பானுமதியின் மகளுக்கு திருமணம் நடைபெற்ற பிறகு, பிரபாகரன் அடிக்கடி அவரது வீட்டுக்கு சென்று வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த உறவுக்கு பானுமதியின் மருமகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பிரபாகரனுடனான தொடர்பை முறித்துக்கொள்ளுமாறு அவர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பானுமதி, பிரபாகரனுடன் பேசுவதைத் தவிர்த்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பிரபாகரன், தான் ஏற்கனவே பானுமதிக்கு கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு கேட்டு தகராறு செய்துள்ளார். இந்த பிரச்சினை தொடர்பாக பானுமதி உடுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் பிரபாகரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த பிரபாகரன், பானுமதியை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால் அவர் அழைப்புகளை ஏற்கவில்லை. இதனால் மேலும் ஆத்திரமடைந்த பிரபாகரன், சம்பவத்தன்று இரவு பாலப்பம்பட்டியில் உள்ள பானுமதியின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
அப்போது பானுமதி தனது உறவினரான மயில்சாமியுடன் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. வீட்டுக்கு வந்த பிரபாகரன், தன் மீது அளிக்கப்பட்டிருந்த போலீஸ் புகாரை வாபஸ் பெறுமாறு பானுமதியிடம் வற்புறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுத்ததால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், அருகில் இருந்த மண்வெட்டியை எடுத்து பானுமதியின் தலையில் பிரபாகரன் தாக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனை தடுக்க முயன்ற மயில்சாமியையும் கல்லால் தாக்கியுள்ளார். தாக்குதலில் பானுமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காயமடைந்த மயில்சாமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பானுமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், பிரபாகரனை கைது செய்துள்ளனர்.
Also Read: “ஆம்பள கிட்ட பேசக்கூடாது” மகன் போட்ட கண்டிஷன்.. தாய் செய்த காரியம்… அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!



