தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக – பாஜக கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சி, விஜயின் தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனை போட்டி நிலவும் என எதிர்ப் பார்க்கப்படுகிறது. இதனிடையே கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்ட தேமுதிக இந்த தேர்தலில் தங்களின் கூட்டணி நிலைபாடு குறித்து இதுவரை அறிவிக்கவில்லை..
சென்னையில் இன்று நடைபெற்ற தேமுதிக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில், பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு பேசினார். அதிமுக கூட்டணியில் இணைந்தபோது மாநிலங்களவை இடம் வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டதாகவும், ஆனால் அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் எடப்பாடி பழனிசாமி தங்களை “ஏமாற்றிவிட்டார், முதுகில் குத்திவிட்டார்” என அவர் குற்றம்சாட்டினார்.
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலத்திலும் கூட்டணி ஒப்பந்தத்தில் தேதி குறிப்பிடாமல் கையெழுத்திடப்பட்டு நம்பிக்கை வைக்கப்பட்டதாகவும், அதே நம்பிக்கையுடன் தான் இப்போதும் நடந்துகொண்டதாகவும் பிரேமலதா விளக்கினார். ஆனால் அதிமுக தலைமையிலிருந்து தங்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
மேலும், எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரசார கூட்டங்களுக்கு மக்கள் காசு கொடுத்து அழைக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். அதேசமயம், முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டுள்ள வெளிநாட்டு பயணத்துக்கு “வெற்றி பெற வாழ்த்துகள்” என்றும் கூறினார்.
இந்த உரை, தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தேமுதிக–அதிமுக கூட்டணியில் கடும் பிளவு ஏற்பட்டிருக்கிறது என்ற எண்ணத்தை வலுப்படுத்தியுள்ளது. குறிப்பாக, அதிமுக மீது கடும் தாக்குதலை மேற்கொண்டு கொண்டே, திமுக முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்திருப்பது, தேமுதிக திமுக கூட்டணியில் இணையலாம் என்ற அரசியல் ஊகங்களுக்கு வலுச்சேர்த்துள்ளது.