சேலம் மாவட்டம் மாறமங்கலம் கிராமத்தை சேர்ந்த சண்முகம் (32) என்பவரும் நாமக்கல் மாவட்டம் சூளங்காட்டு புத்தூர் கிராமத்தை சேர்ந்த சுமதி (30) என்ற பெண்ணும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லை. இதனிடையே சுமதியை திடீரென காணவில்லை.
கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே, சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கோவிந்தன் என்பவரின் கடைக்கு ஒரு பார்சல் வந்தது. அந்த பார்சலை வெங்கடேஷ் என்பவர் கொடுத்ததாக கூறி, அது சண்முகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. பார்சலை திறந்து பார்த்த சண்முகம் அதிர்ச்சி அடைந்தார். அதில் அவரது மனைவி சுமதி அணிந்திருந்த திருமண தாலி இருந்தது.
இதனால் சுமதி மாயமான சம்பவத்தில் வெங்கடேஷுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் சண்முகம் மீண்டும் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வெங்கடேஷ் (22) குறித்து விசாரணை நடத்தினர். அவர் அதே பகுதியைச் சேர்ந்தவர் என்றும், சுமதியுடன் கள்ளக்காதல் தொடர்பில் இருந்ததும் தெரிய வந்தது. போலீசார் வெங்கடேஷை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்ட போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன.
கடந்த ஒரு ஆண்டாக சுமதிக்கும் வெங்கடேஷுக்கும் பழக்கம் இருந்து வந்ததாகவும், அது நாளடைவில் நெருக்கமான உறவாக மாறியதாகவும் அவர் ஒப்புக்கொண்டார். கடந்த 23ஆம் தேதி வழக்கம்போல் இருவரும் தனிமையில் இருந்தபோது, சுமதியின் செல்போனுக்கு புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்துள்ளது. இதுகுறித்து வெங்கடேஷ் கேட்டபோது சுமதி தெளிவான பதில் அளிக்கவில்லை. இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த வெங்கடேஷ், சுமதி அணிந்திருந்த துப்பட்டாவால் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். பின்னர், உடலை மூட்டையாக கட்டி, ஏற்காடு – குப்பனூர் சாலையில் உள்ள முனியப்பன் கோவில் அருகே சுமார் 600 அடி ஆழ பள்ளத்தில் வீசியதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேர தேடுதலுக்குப் பிறகு, சுமதியின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. இதையடுத்து, வெங்கடேஷை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொடூர சம்பவம் ஏற்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



