பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளர் சாதிகாவுடன் விஜய் சேதுபதி நடத்திய உரையாடல் சமூக வலைத்தளங்களில் வைரலானது. தலைமைப் பண்பு மற்றும் எடுத்த முடிவில் உறுதியாக இருப்பது குறித்து அவர் பேசிய கருத்துகள், மறைமுகமாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய்யை குறிவைத்துச் சொல்லப்பட்டதாகப் பரவலாக விவாதிக்கப்பட்டது. இருப்பினும், விஜய் சேதுபதி தனது பேச்சில் விஜய் பற்றியோ அல்லது அவரது அரசியல் கட்சி பற்றியோ எதையும் நேரடியாகக் குறிப்பிடவில்லை.
இந்நிலையில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் தான் நடித்துள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி கலந்துகொண்டு பேசினார். அப்போது, பிக் பாஸ் சர்ச்சைகளுக்குப் பதிலளிக்கும் வகையில் விஜய்யுடனான தனது நட்பு மற்றும் நெகிழ்ச்சியான நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்டார். விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்க்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தபோது, விஜய் உடனடியாக தன்னைத் தொடர்புகொண்டு நன்றி தெரிவித்ததையும், தன் மகன் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாக கூறியதையும் நினைவு கூர்ந்தார்.
மேலும், ஜேசன் சஞ்சய் இயக்கும் ‘சிக்மா’ திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்ற அனுபவத்தையும் விஜய் சேதுபதி பகிர்ந்துகொண்டார். “ஏண்டா, உங்க வீட்டிலேயே இவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாரை வெச்சிருக்கீங்க…” என்று ஜேசன் சஞ்சயிடம் ஜாலியாகப் பேசியதை நினைவு கூர்ந்த அவர், ஜேசனை ஒரு சிறந்த இளைஞர் எனப் பாராட்டினார். அத்துடன், நண்பர் ரோஹன் மூலமாக விஜய் தனக்கு அன்பான கட்டியணைப்பை (Hug) “நான் கொடுத்தேன்னு சொல்லிக் கொடுங்க” எனத் தெரிவித்து அனுப்பிய நிகழ்வையும் கூறி விஜய்யின் எளிமையைப் போற்றினார்.
விஜய் சேதுபதி – பாலாஜி தரணிதரன் கூட்டணியில் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சீதக்காதி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து உருவாகியுள்ள ‘பத்தா’ திரைப்படத்தில் லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குநர் அட்லீ, முராத் கேதானி உள்ளிட்டோர் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படம் வரும் அக்டோபர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



