கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கான காரணங்களை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய, பாஜக சார்பில் ஹேமமாலினி தலைமையில் தேசிய ஜனநாய கூட்டணியின் 8 எம்.பி.க்கள் கொண்ட குழு இன்று தமிழகம் வர உள்ளது.
கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் 27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனிடையே, கரூர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின், கரூரில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கரூரில் நடைபெற்ற கூட்டத்தில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த மக்களுக்கு பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், கரூர் சென்று, கூட்ட நெரிசல் சம்பவத்துக்கான காரணங்கள் குறித்து ஆராய தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து 8 எம்.பி.க்கள் அடங்கிய குழுவை ஜெ.பி.நட்டா அமைத்துள்ளார்.
அந்த குழுவின் தலைவராக ஹேமமாலினி செயல்படுவார். குழு உறுப்பினர்களாக பாஜகவின் அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ் லால், அபராஜிதா சாரங்கி, ரேகா சர்மா, சிவசேனாவின் ஸ்ரீகாந்த் ஷிண்டே, தெலுங்கு தேசம் கட்சியின் புட்டா மகேஷ் குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவினர் கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை இன்று நேரில் சந்தித்து விசாரிக்க உள்ளது.