விழுப்புரம் மாவட்டம் தனலட்சுமி கார்டன் மூவேந்தர் நகரை சேர்ந்த ஜெகதீசனின் மனைவி சிவரஞ்சினி (28). சமீபத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று, அரசு ஆசிரியராக பணி நியமனம் பெற்றார். கடந்த 10 நாட்களுக்கு முன்தான் பணியில் சேர்ந்திருந்தார்.
2023-24 கல்வியாண்டுக்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நேரடி நியமனம் செய்யப்பட்ட 2,715 பேரில் சிவரஞ்சினியும் ஒருவர். இவர்களுக்கான பயிற்சி தொடக்க விழா நேற்று (21.09.2025) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவில் பங்கேற்க சிவரஞ்சினி, திருச்சி பாலகரை மல்லிகைபுரத்தை சேர்ந்த நெகர்நிஷா (47), கடலூர் நல்லாத்தூரை சேர்ந்த கவுசல்யா (23), கள்ளக்குறிச்சி வாணியந்தல் பகுதியை சேர்ந்த பூவிழி (35) ஆகியோரும் ஒன்றாக காரில் செல்ல திட்டமிட்டனர். அவர்களுடன் நெகர்நிஷாவின் கணவர் ஷாகுல்அமீது (52), கவுசல்யாவின் கணவர் எல்லப்பன், பூவிழியின் கணவர் முருகன் ஆகியோரும் சென்றனர். காரை கடலூரை சேர்ந்த சூர்யா (27) ஓட்டிச் சென்றார்.
அதிகாலை 5 மணியளவில் கார் அய்யூர் அகரம் அருகே வந்தபோது, மேம்பாலப் பணிகள் காரணமாக கார் எதிர்திசை சாலையில் சென்றது. அப்போது எதிரே வந்த லாரி காரை மோதி கோர விபத்து ஏற்பட்டது. கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த கோர விபத்தில், ஷாகுல்அமீது மற்றும் ஆசிரியை சிவரஞ்சினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
நெகர்நிஷா, கவுசல்யா, பூவிழி, எல்லப்பன், முருகன், டிரைவர் சூர்யா உள்ளிட்ட 6 பேரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரசு ஆசிரியராக பணி நியமனம் பெற்ற சிவரஞ்சினி 10 நாளில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



