புதிய வடிவத்தில் ஆதார் அட்டை வெளியிடப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவி வந்த தகவல்களுக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) வெளியிட்ட விளக்கத்தில், “புதிய ஆதார் அட்டை” குறித்து வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை என்றும், பொதுமக்கள் அவற்றை நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.
சமீபமாக, புதிய ஆதார் அட்டையில் பயனரின் புகைப்படம் மற்றும் QR குறியீடு மட்டுமே இடம்பெறும் எனவும், அடையாளத் திருட்டு மற்றும் தரவுக் கசிவுகளைத் தடுக்க இந்த மாற்றங்கள் செய்யப்பட்டதாகவும் பல தகவல்கள் வைரலானது. ஆனால் இத்தகவல்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், இத்தகைய தவறான தகவல்கள் மக்களிடம் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துகின்றன என்றும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்ப வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மற்றும் பத்திரிக்கை தகவல் பணியகம் மூலம் வெளியிடப்படும் தகவல்களையே சரிபார்த்து பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுவாக, ஆதார் அட்டையில் பயனரின் புகைப்படம், பெயர், முகவரி, பிறந்த தேதி, ஆதார் எண் மற்றும் QR குறியீடு போன்ற விவரங்கள் இடம்பெறும். இவை அனைத்தும் மாற்றமின்றி தொடர்கின்றன என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, ஆதார் அட்டை தொடர்பாக மற்றொரு முக்கிய விளக்கத்தையும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
அதாவது, ஆதார் அட்டை அடையாளச் சான்றாகப் பயன்படுத்தப்படலாம்; ஆனால் அது பிறந்த தேதிக்கான செல்லுபடியாகும் சான்றாக கருதப்படாது என தெளிவுபடுத்தியுள்ளது. ஆதார் சட்டம் 2016 சட்டத்திலும், ஆதார் அட்டை பிறந்த தேதிக்கான சான்றாக ஏற்கப்படுவது குறித்து குறிப்பிடப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
Read more: உடற்பயிற்சி செய்தாலும் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது உயிருக்கு ஆபத்து.. எச்சரிக்கும் நிபுணர்கள்..!



