கொலை, கொள்ளை, பாலியல் சீண்டல் நடக்காத நாளே இல்லை. சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பு இல்லை என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்பதை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மாநிலம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று அரூரில் பேசிய அவர்; முதல்வர் ஸ்டாலின் 2026 தேர்தலில் திமுக கூட்டணி 200 இடம் வெல்லும் என்று கனவு காண்கிறார். இந்த கூட்டமே அடுத்தாண்டு அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும் என்பதற்கு சாட்சி. முதல்வர் ஸ்டாலின் கூட்டணியை நம்பிக்கொண்டு இருக்கிறார், கூட்டணி வேண்டும் ஆனால் அதுமட்டும் போதாது, மக்கள் நம்பிக்கையைப் பெற வேண்டும். மக்கள் நினைத்தால்தான் யாரும் ஆட்சிக்கு வர முடியும். ஒருபோதும் இந்த தேர்தலில் திமுகவுக்கு அது நடக்காது.
2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தனது தேர்தல் அறிக்கையில் 525 அறிவிப்புகளை ஸ்டாலின் வெளியிட்டார். அவற்றில் 10 % கூட நிறைவேற்றவில்லை, ஆனால் 98% நிறைவேற்றப்பட்டதாக ஸ்டாலினும், அமைச்சர்களும் பச்சை பொய் சொல்கிறார்கள். எனது சுற்றுப் பயணத்தில் 166-வது தொகுதியாக அரூரில் பேசுகிறேன், எனக்கே ஆச்சரியம், பல தொகுதியில் பேசும்போது ஒரு காவலர் கூட பார்க்கவில்லை. ஆனால் இன்றைய தினம் பாதுகாப்பு கொடுக்கிறார்கள். இந்த பாதுகாப்பை மற்ற கட்சிக்கும் வழங்கியிருந்தால் 41 உயிர் பறி போயிருக்காது. எதுக்கு இந்த ஓரவஞ்சணை?
நான் காவல்துறையை குறை சொல்லவில்லை, அதை இயக்குபவர் முதல்வர் தான். தமிழ்நாட்டில் கூட்டம் நடந்தால் அரசு மக்களை பாதுகாத்து, அந்தந்த கட்சிக்கு நல்லது செய்ய வேண்டும். முதல்வர் ஸ்டாலின் இனியாவது மக்களுக்கான பாதுகாப்பை சிந்தித்து சிறந்த முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம் – ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. கொலை, கொள்ளை, பாலியல் சீண்டல் நடக்காத நாளே இல்லை. சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பு இல்லை.
தமிழ்நாடு முழுவதும் 6 ஆயிரம் மதுக்கடை, டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில் விற்பனை செய்யப்படுகிறது, ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக பெறுவதால் நாள் ஒன்றுக்கு 15 கோடி ரூபாயும், மாதத்துக்கு 450 கோடி ரூபாயும், வருடத்துக்கு 5,400 கோடியுமாக இந்த நான்கு ஆண்டுகளில் 22 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள் என்றார். இக்கூட்டத்தின் போது அதிமுக தொண்டர்கள் பொது மக்களோடு நடிகர் விஜய்யின் தவெக தொண்டர்களும் கையில் கொடியுடன் பங்கேற்றனர்.



