மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரை போலீஸார் அடித்துக் கொன்ற வழக்கில், நகை திருட்டு புகார் கொடுத்த கல்லூரி பேராசிரியை திருமங்கலம் நிகிதா, அவரது தாயார் சிவகாமியிடம் சிபிஐ அதிகாரிகள் மதுரையில் 2-வது முறையாக விசாரித்தனர்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிகப் பணியாளராகப் பணியாற்றி வந்த கோவில் காவலாளி அஜித் குமார், அங்கு சாமி கும்பிட வந்த நிகிதா என்னும் பெண்ணின் நகை காணாமல் போன வழக்கில், தனிப்படைக் காவலர்களால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொடூரமான முறையில் தாக்கிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நிகிதா என்னும் பெண் ஏற்கனவே ஒரு மோசடிப் பேர்வழி என்பதும், அவர்மீதும் அவர் குடும்பத்தினர் மீதும் கடந்த 2011-ம் ஆண்டு மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கான எஃப்.ஐ.ஆர்-உம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
அஜித்குமார் கொலை வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டு சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வழக்கின் விசாரணை அதிகாரியாக சிபிஐ துணைக் கண்காணிப்பாளா் மோஹித்குமாா் நியமிக்கப்பட்டார். முதல் கட்டமாக, மடப்புரம் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர், அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார், கோயில் கார் ஓட்டுர் கார்த்திக்வேலு, காவல் வாகன ஓட்டுநர் ராமச்சந்திரன், காவலாளிகள் பிரவின், வினோத், ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார் ஆகிய 6 பேர் சிபிஐ அலுவலகத்தில் கடந்த 18-ஆம் தேதி முன்னிலையாகி விளக்கமளித்தனர்.
இதைத் தொடா்ந்து, நவீன்குமாா், கோயில் தட்டச்சா் பிரபு, காவலாளிகள் பிரவின், வினோத், விடியோ எடுத்த சக்தீஸ்வரன், ஆட்டோ ஓட்டுநர் அருண்குமாா் ஆகிய 6 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் கடந்த 22-ஆம் தேதியும், திருப்புவனம் அரசு மருத்துவமனை மருத்துவர் கார்த்திகேயன், செவிலியர் சாந்தி, உதவியாளர் அழகர், கோயில் கண்காணிப்பாளர் பாஸ்கரன், ஊழியர்கள் கண்ணன், கார்த்திக் ஆகியோரிடம் கடந்த 23-ஆம் தேதியும் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரை போலீஸார் அடித்துக் கொன்ற வழக்கில், நகை திருட்டு புகார் கொடுத்த கல்லூரி பேராசிரியை திருமங்கலம் நிகிதா, அவரது தாயார் சிவகாமியிடம் சிபிஐ அதிகாரிகள் மதுரையில் 2-வது முறையாக விசாரித்தனர். 6 மணி நேரம் அவர்களிடம் விசாரணை நடந்தது. அப்போது, அஜித்குமாரிடம் பேசியது குறித்தும், ஜூன் 27-ம் தேதி காலையில் கோயிலில் நடந்த சம்பவம், மாலையில் திருப்புவனம் காவல் நிலையத்துக்கு அஜித்குமாரை அழைத்து சென்றபோது, நிகிதாவும், தாயாரும் காவல் நிலையத்தில் நடந்தவை என பல்வேறு கோணத்திலும் விசாரித்தனர்.



