பிரபல மசாலா நிறுவனமான ‘எவரெஸ்ட் ஃபூட் ப்ராடக்ட்ஸ்’ (Everest Food Products) தயாரிப்பான பாக்கெட் சீரகத் தூளில் (Pre-packed Cumin Powder) அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாகப் பூச்சிக்கொல்லி மருந்தின் எச்சங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த குறிப்பிட்ட சீரகத் தூள் பாக்கெட்டுகளைச் சந்தையிலிருந்து உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) உத்தரவிட்டுள்ளது.
இதேபோன்று, சுகாதாரக் குறைபாடுகள் காரணமாக ‘கிரியேட்டிவ் பேக்கர்ஸ் அண்ட் கான்ஃபெக்ஷனர்ஸ்’ (Creative Bakers and Confectioners) நிறுவனத்தின் உரிமத்தையும் FSSAI உடனடியாகப் இடைநிறுத்தம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
கோவாவில் உள்ள ‘ரிவர்சைடு ரிசார்ட்ஸ் & ஹாலிடே ஹோம்ஸ்’ நிறுவனத்தின் வளாகத்திலிருந்து எவரெஸ்ட் சீரகத் தூளின் மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. பரிசோதனை அறிக்கையில், அஸோக்ஸிஸ்ட்ரோபின் (Azoxystrobin) மற்றும் தையாமெதோக்சாம் (Thiamethoxam) ஆகிய பூச்சிக்கொல்லி மருந்துகளின் எச்சங்கள் அரசு நிர்ணயித்த அளவை விடக் மிக அதிகமாக இருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம் 2006-ன் கீழ் இந்த சீரகத் தூள் மாதிரி “உண்பதற்குப் பாதுகாப்பற்றது” என உணவுப் பகுப்பாய்வாளர் அறிவித்தார். நிறுவனத்தின் மேல்முறையீட்டைத் தொடர்ந்து, மேல்முறையீட்டு உணவுப் பரிசோதனைக்கூடத்திலும் இந்த மாதிரிகள் மீண்டும் பரிசோதிக்கப்பட்டு, அதே முடிவுகள் உறுதி செய்யப்பட்டன.
பாதிக்கப்பட்ட அந்த குறிப்பிட்ட பேட்ச் சீரகத் தூள் பாக்கெட்டுகள் முழுவதையும் சந்தையிலிருந்து உடனடியாகத் திரும்பப் பெற எவரெஸ்ட் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. திரும்பப் பெறப்பட்ட பொருட்களின் முழு விவரங்களையும் பராமரித்து FSSAI அமைப்பிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இதுபோன்ற தவறுகள் மீண்டும் நிகழாமல் இருக்கத் தகுந்த சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு அதுகுறித்த அறிக்கையையும் தாக்கல் செய்ய வேண்டும்.
நுகர்வோரின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில், உணவு வணிக நிறுவனங்கள் மற்றும் மின்-வர்த்தகத் தளங்கள் மீது FSSAI தனது கடுமையான கண்காணிப்பையும் நடவடிக்கைகளையும் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது.



