ஆந்திர மாநிலத்தில் உள்ள பத்ராத்திரி கோத்தகுடேம் மாவட்டம், மாணு குரு, பாகிடேறு கொல்ல கோட்டூர் ஆகிய 3 கிராமங்களில் கிணறுகள் மற்றும் வீடுகளுக்கு வரும் குடிநீர் குழாய்களில் இருந்து திடீரென சூடான நீர் வருவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
வழக்கமாக குடிநீருக்காக பயன்படுத்தப்படும் கிணறு மற்றும் குழாய் நீர் தற்போது மிகவும் சூடாக இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அன்றாட தேவைகளுக்குக்கூட அந்த நீரை உடனடியாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பாக குடிநீரை பயன்படுத்துவதற்கு முன்பு, அதனை குளிரவைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சூடாக வரும் நீரை சிறிது நேரம் ஆறவைத்த பின்னரே மக்கள் குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். இந்த வினோதமான நிகழ்வு அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் இந்தப் பகுதிகளில் நிலத்திற்கு அடியில் நிலக்கரி சுரங்கம் இருப்பதால் அதிலிருந்து வெளியேறும் வெப்பம் காரணமாக இந்த வகையான சூடான நீரவியாக வரலாம் எனவும்,மேலும் திடீரென நீர் சூடாக வருவதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிநீர் ஆதாரங்களில் இருந்து சூடான நீர் வருவதால், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



