கரூரில் நடந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிவித்தது கட்சிக்குள் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாநில தலைவர் பதவி பறிக்கப்பட்டது முதல், அண்ணாமலைக்கு எந்த வகையான மாநில அல்லது தேசிய பதவியும் வழங்கப்படவில்லை. முன்னாள் தலைவர் என்ற முறையில் மட்டுமே அவர் பாஜவில் உள்ளார். இதனால் கட்சி சார்பான நிகழ்ச்சிகளில் பெரிதாக பங்கு பெறாமல் இருந்துவருகிறார்.
இந்நிலையில் கரூரில் நடந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவிக்க அண்ணாமலை நேற்று சென்றார். அப்போது அவர், “உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கரூர் பாஜக சார்பில் ரூ.1 லட்சம் வழங்கப்படும்’’ என்று திடீரென அறிவித்தார். இந்த அறிவிப்பு நயினார் நாகேந்திரன் ஆதரவாளர்களின் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. “மாநிலத் தலைவர் இருக்கையில், முன்னாள் தலைவராகிய அண்ணாமலை எப்படி தனியாக நிதி வழங்கப்படும் என்று அறிவிக்க முடியும்?” என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், தலைவராக இருந்தபோது, “நான் சொல்வது தான் கட்சியின் கருத்து, மற்றவர்கள் சொல்வது அவர்களின் சொந்த கருத்து” எனத் தெளிவுபடுத்திய அண்ணாமலை, தற்போது எந்தப் பதவியும் இல்லாமல் இத்தகைய அறிவிப்பு விடுத்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நயினார் ஆதரவாளர்கள் டெல்லி தலைமைக்கும் புகார் அளித்துள்ளனர். இதனால் பாஜகவில் பரபரப்பு அதிகரித்துள்ளது.