2000 தொடக்க பால் கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த அண்ணாமலை…!

annamalai 2

தொடக்க பால் கூட்டுறவு சங்க ஊழியர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் திமுக அரசு நடத்துவதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் தொடக்க பால் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிந்து, ஓய்வு பெற்ற பணியாளர்கள் சுமார் 2,000 பேர் உள்ளனர். இவர்களுக்கு தமிழக அரசு ஓய்வூதியம் வழங்குவதில்லை. விவசாயிகளிடம் நேரடியாக பால் கொள்முதல் செய்யும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்காமல், கொள்முதல் செய்த பாலை, அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் இரண்டாம், மூன்றாம் கட்ட நிலையிலுள்ள ஊழியர்களுக்கு மட்டும் ஓய்வூதியம் வழங்க தனி நிதியம் பராமரிக்கப்பட்டு, ஓய்வூதியம் வழங்கப்படுகிறது என்பது ஊழியர்களிடையே ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.

இவ்வாறு தொடக்க பால் கூட்டுறவு சங்க ஊழியர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தி வருவது வருந்தத்தக்கது மட்டுமின்றி, சற்றும் ஏற்றுக் கொள்ள முடியாதது. இவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கினால் தமிழக அரசுக்கு பெரிய அளவில் நிதிச் சுமை ஏற்படப் போவதில்லை. ஆனாலும், அவர்களின் கோரிக்கையைப் பரிசீலிக்க மனமில்லாமல், அவர்கள் கோரிக்கையைத் தொடர்ந்து திமுக அரசு புறக்கணித்து வருவது கண்டிக்கத்தக்கது.

உடனடியாக, பால் உற்பத்தித் துறையில், மாவட்ட மற்றும் மாநில அளவில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்படுவதைப் போல, தொடக்க பால் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க, தனி நிதியம் அமைத்து அதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அவர்களின் இதர கோரிக்கைகளான, மருத்துவக் காப்பீடு, நாள்தோறும் 500 மி.லி பால் மற்றும் பண்டிகை காலங்களில் ஆவின் இனிப்பு, நெய் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று... இன்று இடி, மின்னலுடன் மழை...! வானிலை மையம் எச்சரிக்கை...!

Wed Sep 3 , 2025
தமிழகத்தில் 6-ம் தேதி வரை வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவானது. இது மேலும் வலுவடைந்து, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒடிசா பகுதிகளை நாளை கடந்து செல்லக்கூடும். இதற்கிடையே, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வடதமிழகத்தின் ஒருசில இடங்களிலும், […]
rain

You May Like