2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி நாட்டின் முதல் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. நிஷினில் உள்ள கொரோகி ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்ற தங்கப்பதக்கத்துக்கான இறுதிப் போட்டியில், இலங்கை அணியை 147 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இந்த வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
போட்டியின் தொடக்கத்தில் இருந்தே இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 99 ரன்கள் குவித்து வலுவான அடித்தளம் அமைத்தது. ஷஃபாலி வர்மா 29 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் அதிரடியை தொடர்ந்த ஸ்மிருதி மந்தனா 45 பந்துகளில் 79 ரன்கள் விளாசினார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ரன்கள் சேர்க்க சிரமப்பட்ட நிலையிலும், ஸ்மிருதி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 11,000 ரன்களைக் கடந்து ஸ்மிருதி மந்தனா புதிய சாதனையும் படைத்தார்.
நடுஓவர்களில் இலங்கை அணி சற்று ஆதிக்கத்தை செலுத்த முயன்ற நிலையில், விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிச்சா கோஷ் ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். இலங்கை பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த அவர், வெறும் 22 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 49 ரன்கள் குவித்தார்.
இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 216 ரன்கள் என்ற பிரம்மாண்ட ஸ்கோரை எட்டியது. இது ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றிலேயே பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியை, இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் நிலைகுலைய வைத்தனர். பேட்டிங்கில் அசத்திய ஷஃபாலி வர்மா பந்துவீச்சிலும் மிளிர்ந்து, 2 ஓவர்களில் வெறும் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தீப்தி சர்மா மற்றும் ஸ்ரீ சரணி ஆகிய இரு சுழற்பந்துவீச்சாளர்களும் தலா 3 விக்கெட்டுகளையும், ஸ்ரேயங்கா பாட்டீல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இலங்கை அணியை சுருட்டினர்.
இலங்கை அணியின் கேப்டன் சசாரி அத்தபத்துவை மட்டுமே அந்த அணி பெரிதும் நம்பியிருந்தது. அவரும் 21 பந்துகளில் 29 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 7வது ஓவரில் தீப்தி சர்மாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டுக்குப் பிறகு இலங்கை அணி சீட்டுக்கட்டு போல் சரிந்தது. கேப்டனைத் தவிர வேறு எந்த வீராங்கனையும் 20 ரன்களைக் கூட தாண்டவில்லை.
இறுதியில், இலங்கை அணியை ஆல்-அவுட் செய்து 147 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ஏற்கனவே 2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றிருந்த இந்திய மகளிர் அணி, தற்போது மீண்டும் தங்கம் வென்று தனது சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக்கொண்டு நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளது.
இதனை தொடர்ந்து ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற இந்திய மகளிர் அணியில் இடம்பெற்றிருந்த கமலினிக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். கமலினியின் இந்த வெற்றி, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கும், மகளிருக்கும் புதிய உத்வேகத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும். இவர் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.



