தருமபுரி மாவட்டம் கடத்தூரை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரின் குடும்பப் பிரச்சனையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி, அந்தரங்கப் படங்களை வைத்து மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வழக்கில் பூசாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடத்தூர் பகுதியைச் சேர்ந்த 21 வயதான திருமணமான கல்லூரி மாணவிக்கும் அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதனை தீர்த்து வைப்பதாக கூறி, கணவரின் நண்பரான ரகுராம் என்ற கோவில் பூசாரி அப்பெண்ணிடம் பழகியுள்ளார். அப்போது ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வைத்து மிரட்டி, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அதனை ரகசியமாக வீடியோவும் எடுத்துத் தொடர்ந்து அச்சுறுத்தி வந்துள்ளார்.
இதனிடையே, ரகுராமின் நண்பரான சென்னையை சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும் மாணவியின் விவரம் தெரியவந்துள்ளது. அவரும் அந்தப் படங்களைக் காட்டி மிரட்டி, மாணவியை வீடியோ அழைப்பில் நிர்வாணமாக தோன்றுமாறு கட்டாயப்படுத்தி அதையும் பதிவு செய்துள்ளார். பின்னர், அந்த வீடியோவை காட்டி மிரட்டி பாலியல் ரீதியாக இணங்குமாறு நிர்ப்பந்தித்துள்ளார். இதற்கு மாணவி மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த ராஜ்குமார் அந்த நிர்வாண வீடியோவை மாணவியின் கணவர், மாமனார் மற்றும் சகோதரரின் செல்போன்களுக்கு அனுப்பி வைத்து கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
இதனால் மனவேதனையடைந்த கல்லூரி மாணவி, அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் பூசாரி ரகுராமை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ராஜ்குமாரைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்ட பூசாரி ரகுராம் இதேபோன்று வேறு ஏதேனும் பெண்களை மிரட்டி மோசடியில் ஈடுபட்டுள்ளாரா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



