சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, முதல்வர் விஜய்யின் உடல்மொழி மு.க.ஸ்டாலினை கேலி செய்யும் வகையில் இருந்ததாகவும், இது மனித மாண்புகளுக்கு எதிரானது என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”முதல்வர் தரப்பில் ‘உள்நோக்கம் கொண்டதல்ல’ என விளக்கம் அளிக்கப்பட்டிருந்தாலும், அத்தகைய உடல்மொழி கண்ணியமான அணுகுமுறை அல்ல; அது மனித மாண்புகளுக்கு எதிரானது. அரசியல் விமர்சனங்கள் வேறு, தனிநபர் தன்மதிப்பைக் காயப்படுத்துவது வேறு. அதிகாரம், பலம் இல்லாத எளிய மனிதரையும் காயப்படுத்துவது ஏற்புடையதல்ல.
அகவையில் மூத்தோரை மதிப்பது மிக உயர்ந்த மாண்பு. மகத்தான பொறுப்பில் இருக்கும் முதல்வர், இனிவரும் காலங்களில் தனது உடல்மொழியில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். பேரவையில் திமுக தரப்பு வைத்த கோரிக்கையின் போது இடைமறித்துப் பேசிய சட்டத்துறை அமைச்சரின் கருத்து முற்றிலும் வரலாற்றுப் பிழையானது. மிசா காலத்துக் கொடுமைகளை எதிர்கொண்ட திமுக தலைவர் குறித்து தவறான கருத்தைப் பதிவு செய்ததை சட்டத்துறை அமைச்சர் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றார்.



