கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் கருவாட்டா பகுதியில் பூட்டிய வீட்டிற்குள் 65 வயது முதியவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது 13 வயது பேத்தி உட்பட நான்கு சிறுவர்களைக் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொல்லம் பரவூர் பகுதியைச் சேர்ந்த சிவன்குட்டி செட்டியார் என்பவர் தனது 13 வயது பேத்தியுடன் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக வீடு பூட்டிக்கிடந்துள்ளது. 8-ஆம் வகுப்பு படிக்கும் அந்தப் பேத்தியே இந்த கொடூரக் கொலைக்குத் திட்டம் தீட்டி, தனது நண்பர்களான மூன்று சிறுவர்கள் மூலம் கொலையை அரங்கேற்றியுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைகால்களைக் கட்டி கழுத்தை நெரித்துக் கொலை:
சனிக்கிழமை மாலை வேளையில் சிவன்குட்டியை அருகில் உள்ளவர்கள் பார்த்த நிலையில், அன்றைய இரவே அவர் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். அவரது கைகளும் கால்களும் பின்புறமாகக் கட்டப்பட்டுக் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மேலும், தடயங்களை மறைப்பதற்காக உடலின் அருகில் மிளகாய்த்தூள் தூவப்பட்டிருந்ததுடன், படுக்கையறை அலமாரி உடைக்கப்பட்டு அங்கிருந்த தங்க நகைகளும் பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
செல்போன் அழைப்புகள் மூலம் அம்பலமான உண்மை:
ஆரம்பத்தில் இது திட்டமிடப்பட்ட கொள்ளை சம்பவமாகவே கருதப்பட்டாலும், குடும்பத்தினரின் செல்போன் அழைப்பு விவரங்களை ஆய்வு செய்தபோது காவல்துறையினருக்கு முக்கியத் திருப்பம் கிடைத்தது. கொலை நடந்த பிறகு, அந்தச் சிறுவர்கள் கொலையை செல்போனில் வீடியோ எடுத்துச் சிறுமியிடம் காட்டியுள்ளதாகக் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
கொலைக்கான திடுக்கிடும் காரணங்கள்:
கொள்ளையடிக்கப்பட்ட பணம் மற்றும் நகைகளை கொண்டு 13 வயது சிறுமிக்கு புதிய ஐபோன் வாங்குவதற்கும், மற்ற மூன்று சிறுவர்களுக்குப் பைக்குகள் வாங்குவதற்கும் திட்டம் தீட்டப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. மேலும், சிறுமி அடிக்கடி செல்போன் பயன்படுத்துவதையும், தாமதமாக வீட்டிற்கு வருவதையும் தாத்தா தொடர்ந்து கண்டித்து திட்டியதால் அவர் மீது ஏற்பட்ட ஆத்திரத்திலும், கொல்லம் பகுதியில் படித்தபோது பழக்கமான சிறுவர்களின் உதவியோடு இந்த கொடூரத்தைச் செய்துள்ளது தெரியவந்துள்ளது.
சம்பவம் நடந்த சமயத்தில், சிவன்குட்டியின் மனைவி தனது மகளின் பிரசவத்திற்காக மருத்துவமனையில் இருந்துள்ளார். மற்றொரு மகள் வெளிநாட்டில் வசிக்கிறார். தற்போது சிவன்குட்டியின் உடல் ஹரிப்பாட் தாலுகா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், ஆலப்புழா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தடயவியல் மருத்துவ நிபுணர் முன்னிலையில் உடற்கூறாய்வு நடைபெறவுள்ளது. மேலும் விலையுயர்ந்த பொருள்கள் வாங்குவதற்காக தாத்தாவையே கொலை செய்த சிறுமியின் இந்த செயல் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



