வாய் துர்நாற்றம் என்பது பலரும் சாதாரண பிரச்சனையாக நினைத்து அலட்சியப்படுத்தும் ஒரு விஷயம். ஆனால், மருத்துவ ரீதியில் ஹாலிடோசிஸ் (Halitosis) என்று அழைக்கப்படும் இந்த நிலை, சில நேரங்களில் உடல்நலப் பிரச்சனைகளின் அறிகுறியாகவும் இருக்கலாம். தினமும் பல் துலக்கிய பிறகும் வாய் துர்நாற்றம் நீடித்தால், அதற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிவது மிகவும் முக்கியம். பொதுவாக, வாய் துர்நாற்றம் ஏற்பட்டால் முதலில் பல் மருத்துவரை அணுகுவது நல்லது. பற்களில் சொத்தை, ஈறு நோய், பல் கறை அல்லது பற்களுக்கு இடையில் சிக்கியுள்ள உணவுத் துகள்கள் போன்றவை இந்தப் பிரச்சனைக்கு காரணமாக இருக்கலாம்.
இதுபோன்ற பிரச்சனைகளுக்கு சரியான சிகிச்சை அளித்தால், வாய் துர்நாற்றமும் குறைய வாய்ப்புள்ளது. பல் தொடர்பான பிரச்சனைகள் இல்லையெனில், அடுத்ததாக காது, மூக்கு, தொண்டை (ENT) மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். சைனஸ் தொற்று, தொண்டை அழற்சி, மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகளாலும் தொடர்ந்து வாய் துர்நாற்றம் ஏற்படலாம். சிலருக்கு வயிறு மற்றும் செரிமான அமைப்பில் உள்ள கோளாறுகளும் இந்தப் பிரச்சனைக்கு காரணமாக இருக்கலாம். அதனால், தேவைப்பட்டால் இரைப்பை மற்றும் குடல் நிபுணரின் ஆலோசனையைப் பெறலாம்.
அறிகுறிகளைப் பொறுத்து, எண்டோஸ்கோப்பி போன்ற பரிசோதனைகளை மருத்துவர் பரிந்துரைக்கலாம். வயிற்றில் ஹெலிகோபாக்டர் பைலோரி (H. pylori) என்ற பாக்டீரியா தொற்று இருக்கிறதா என்பதை அறிய, சிலருக்கு பயாப்ஸி பரிசோதனையும் மேற்கொள்ளப்படலாம். அதேபோல், சிறுகுடலில் ஊட்டச்சத்துகள் சரியாக உறிஞ்சப்படுகிறதா என்பதை மதிப்பிடுவதற்காக டியோடினல் பயாப்ஸி போன்ற பரிசோதனைகளும் சிலருக்கு தேவைப்படலாம். வாய் துர்நாற்றம் வராமல் இருக்க, தினமும் இரண்டு முறை பல் துலக்குவது மட்டுமல்லாமல், பற்களுக்கு இடையில் சிக்கியுள்ள உணவுத் துகள்களை டென்டல் ஃப்ளாஸ் (Dental Floss) மூலம் அகற்றுவதும் முக்கியம்.
இல்லையெனில், பாக்டீரியாக்கள் பெருகி துர்நாற்றத்தை ஏற்படுத்தும். மேலும், சில உடல்நலக் கோளாறுகளும் மூச்சில் துர்நாற்றத்தை உண்டாக்கக்கூடும். குறிப்பாக, நீரிழிவு நோய், சிறுநீரக செயலிழப்பு, கல்லீரல் பாதிப்பு போன்ற பிரச்சனைகள் இருந்தால், மூச்சில் வழக்கத்திற்கு மாறான வாசனை ஏற்படலாம். இதுபோன்ற அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகி தேவையான பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது. வாய் துர்நாற்றத்தை மறைக்க மவுத் ஃபிரெஷனர் அல்லது சூயிங் கம் பயன்படுத்துவது தற்காலிகத் தீர்வாக மட்டுமே இருக்கும். பிரச்சனை மீண்டும் மீண்டும் தொடர்ந்தால், அதற்கான அடிப்படை காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை பெறுவதுதான் நிரந்தரமான தீர்வாகும்.
Also Read: அடிக்கடி எக்ஸ்ரே எடுத்தா புற்றுநோய் வருமா? மருத்துவர் அளித்த விளக்கம்.



