தமிழகத்தில் உள்ள கோவில்களில் சினிமா பிரபலங்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் புகைப்படம் மற்றும் காணொளி எடுப்பதற்கு தடை விதித்து, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வினய் கடுமையான சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த சுற்றறிக்கையில், கலைத்துறை பிரபலங்கள் மற்றும் முக்கிய நபர்கள் கோவில் தரிசனத்திற்கு வரும்போது, அவர்கள் வருகை தரும் நேரம் மற்றும் உடன் வருபவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை குறைந்தபட்சம் ஒரு நாளுக்கு முன்பாக ஆணையர் அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவில் வளாகத்திற்குள் அவர்கள் புகைப்படம் அல்லது காணொளி பதிவு செய்ய எவ்வித அனுமதியும் வழங்கக் கூடாது என்றும், இவர்களின் வருகையால் சாதாரண பக்தர்களின் தரிசனத்திற்கு எவ்வித இடையூறும் ஏற்படக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
முன்கூட்டியே அனுமதி பெற்றவர்கள் அல்லது பாதுகாப்புப் பணியில் இருக்கும் அதிகாரிகள் மட்டுமே அவர்களுடன் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் எனச் செயல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு சினிமா பிரபலங்களுக்கு மட்டும் போதாது என்றும், மக்கள் பிரதிநிதிகள், அரசியல்வாதிகள் மற்றும் காவல் துறையினருக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை பக்தர்கள் மத்தியில் வலுத்துள்ளது. அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கோவில்களுக்கு வரும்போது, உரிய நுழைவுச் சீட்டு பெறாமலும், வரிசையில் நிற்காமலும் 10 முதல் 20 பேருடன் கூட்டமாகச் சென்று தரிசனம் செய்வது பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
அரசியல் பிரமுகர்கள் மற்றும் காவல் துறையினர் தங்களுக்கு வேண்டியவர்களை அழைத்துக்கொண்டு டிக்கெட் இல்லாமல் கோவிலுக்குள் செல்வதைக் கோவில் அதிகாரிகள் கண்டிப்புடன் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், இத்தகைய நடவடிக்கைகளை கட்டுப்படுத்த டிஜிபி உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



