தமிழகத்தில் பாஜக – அதிமுக கூட்டணியால் வாக்கு திருட்டு நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது என ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
வாக்குத்திருட்டை தடுப்போம், ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்ற தலைப்பில் திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அரசியல் மாநாடு நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய ப.சிதம்பரம் வேண்டும் வாக்கு எண்ணிக்கையில் பிழைகள் இருப்பது தெரியும். தோல்வி அடைந்த வேட்பாளரை வெற்றி பெற்றதாக அறிவிப்பதும் நமக்கு தெரியும். சிறுபான்மையினரை, தாழ்த்தப்ப்டடவர்களை வாக்களிக்கவிடாமல் தடுப்பது தெரியும். ஆனால் வாக்குத் திருட்டு குறித்து ராகுல்காந்தி கூறிய பின்னர் தான் அனைவருக்கும் தெரிகிறது. கர்நாடகத்தில் பெங்களூர் மத்திய தொகுதியில் 7 சட்டப் பேரவை தொகுதிகள் உள்ளன. அதில் மகாதேவ்பூரா சட்டப் பேரவை தொகுதியில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 3 சட்டப் பேரவை தொகுதிகளில் பாஜக வேட்பாளர் முன்னிலையில் இருந்தார், 3-ல் காங்கிரஸ் வேட்பாளர் மன்சூர்கான் முன்னிலையில் இருந்தார்.
இந்த 6 தொகுதிகளிலும் நிகர முன்னணி என்றால் மன்சூர்கான் 88 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் இருந்தார். ஆனால் ஒரு சட்டப் பேரவை தொகுதியில் லட்சத்துக்கு அதிகமான முன்னணியில் இருந்ததாக தெரிவித்து, பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. வாக்குத் திருட்டு குறித்து ராகுல்காந்தி அம்பலப்படுத்தியும் தேர்தல் ஆணையம் அதை விசாரிக்க மறுக்கிறது. போலியான வாக்காளர்களை சேர்ப்பது, உண்மையான வாக்காளர்களின் பெயர்களை நீக்குவது, ஒரு முகவரியில் 120 பேரை சேர்ப்பது, அவர்கள் பெயரில் பாஜகவினர் வாக்களித்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
இதெல்லாம் தில்லுமுல்லு என்று பல புள்ளியியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். வாக்குத்திருட்டு பிஹாரில், கர்நாடகத்தில், மகாராஷ்டிராவில் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் வாக்குத்திருட்டுக்கான சதி நடைபெறலாம். அதை செயல்படுத்த பாஜக உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில்,கேரளத்தில் அதை நடக்க விடமாட்டோம். தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அணி வலிமையான அணி. ஆனால் அதிமுக அணியை குறைத்து மதிப்பிடமாட்டேன். இந்த 2 அணிகள் இருந்தால் வாக்குத் திருட்டு நடைபெறாது என்றார்.