மூளை அமீபா பாதிப்பு தொற்று நோய் இல்லை, எனவே பெரிய அளவில் பதற்றமடைய வேண்டியதில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; மூளைக்காய்ச்சல் குறித்தான கேள்விக்கு பதிலளித்த அவர், “கேரளாவில் 18 பேர் மூளை தின்னும் அமீபா நோய் பாதிப்பிற்குள்ளாகி சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்பட்டுள்ளது. கடந்த 1 வாரகாலமாகவே இந்த நோயின் தன்மை கூடியிருக்கிறது. நோய் பாதிப்பிற்கான காரணங்களை மருத்துவ வல்லுநர்களிடம் கேட்கும்போது, அசுத்தமான நீர், மாசுபட்ட நீர் நிரம்பிய குளம், குட்டைகள், நீர்நிலைகளில் தேங்கிய சேறுகளில் தான் அமீபா உருவாவதாக சொல்லப்படுகிறது.
அத்தகைய குளம், குட்டைகளில் குளிக்கும்போது மூக்கின் வழியே அமீபா சென்று மூளையை பாதித்து, மூளைக்காய்ச்சல் ஏற்பட்டு மரணங்கள் நிகழ்கிறது. இது தொற்று நோய் இல்லை என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம். எனவே பெரிய அளவில் பதற்றமடைய வேண்டியதில்லை. அசுத்தமான குளம் குட்டைகளில் குளித்ததால்தான் நேக்லேரியா ஃபோவ்லேரி (Naegeleria Fowleri) என்ற அமீபா ஏற்பட்டு, அரிதான மூளைக் காய்ச்சல் நோயான, முதன்மை அமீபிக் மெனிங்- என்சஃபலிட்டிஸ் (Primary Amoebic Meningo-Encephalitis (PAM) நோய் பாதிப்பு ஏற்படுகிறது.
இந்த நோய் பாதிப்பிற்கு உள்ளானவர்களுக்கு கடுமையான தலைவலி, காய்ச்சல், வாந்தி, மன குழப்பநிலை, கழுத்து வலி, மயக்கங்கள் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. கேரள மாநில சுகாதாரத்துறை நோய் பாதிப்பிற்கு உள்ளானவர்களுக்கு சிறப்பான சிகிச்சைகளை வழங்கி நோய் பாதிப்பிற்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். தமிழகத்தில் உள்ள பொதுமக்களுக்கு அறிவுறுத்துவது என்னவென்றால் குளம் மற்றும் குட்டைகள், பராமரிப்பு இல்லாத நீச்சல் குளங்களில் குளிப்பதை தவிர்த்துக் கொள்வது நல்லது என தெரிவித்துள்ளார்.