கடந்த 2025ஆம் ஆண்டு கரூரில் தவெக தலைவரும், முதல்வருமான விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட எதிர்பாராத கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாடு முழுவதையும் உலுக்கிய இச்சம்பவம் குறித்து தற்போது சிபிஐ தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், உயிரிழந்தவர்களில் 31 பேரின் குடும்பத்தினருக்குக் கருணை அடிப்படையில் அரசு பணி வழங்குவதற்கான பணி நியமன ஆணைகளை சமீபத்தில் முதலமைச்சர் விஜய் நேரில் வழங்கியிருந்தார்.
இந்த அரசாணைக்கு எதிராகச் சென்னை சூளையைச் சேர்ந்த வழக்கறிஞர் என்.பிரபாகரன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், “பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஏற்கனவே அரசு தரப்பில் ரூ.10 லட்சமும், த.வெ.க. சார்பில் ரூ.20 லட்சமும் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2020-ஆம் ஆண்டின் அரசாணைப்படி அரசியல் ரீதியான கூட்டங்களில் உயிரிழப்போருக்குக் கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வழிவகை இல்லை” எனச் சுட்டிக்காட்டியிருந்தார்.
அதோடு, சிபிஐ விசாரணை நிலுவையில் இருக்கும் சூழலில் இத்தகைய அரசுப் பணிகள் வழங்கப்படுவது, சாட்சியங்களை மாற்றவோ அல்லது விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்தவோ வாய்ப்பாக அமைந்துவிடும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பின்னர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுப் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை முழுமையாக ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அரசுப்பேருந்தில் சென்று விபத்தில் உயிரிழப்பவர்களின் குடும்பத்திற்கு அரசுப்பணி வழங்குவீர்களா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்திற்கு சாதாரண பணி வழங்கியுள்ளதாக தமிழக அரசு கூறுவதை ஏற்க முடியாது. வேண்டுமென்றால், திறன் பயிற்சி வழங்கி உதவலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
Read More : வேட்புமனுவில் மர்மம்? ஸ்டாலினுக்கு எதிராக பாய்ந்த வழக்கு..!! ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு..!!


