இந்தியாவில் தற்போது 101 மில்லியன் மக்கள், நீரிழிவு நோயுடன் வாழ்ந்துகொண்டிருப்பதாகவும்,136 மில்லியன் மக்களுக்கு முந்தைய நிலையில் இருப்பதாகவும் ஆய்வறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வு, மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தால் இணைந்து நடத்தப்பட்டதாக, கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில், நீரிழிவு நோய் குறித்து மட்டுமல்லாமல் ரத்த அழுத்தம், உடல் பருமன், கொலஸ்ட்ரால் போன்ற பல்வேறு நோய்கள் பற்றியும் சேகரிக்கப்பட்டன. நீரிழிவு நோய் எண்ணிக்கையில், இந்தியாவிலேயே கோவாவில் அதிகமாக இருப்பதாகவும் அடுத்த இடங்களில் கேரளா மற்றும் புதுச்சேரி (25%) உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மக்கள்தொகையில் 11.4 சதவிகிதம் பேர், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15.3 சதவிகிதம் பேர் நீரிழிவு நோய் ஏற்படும் சாத்தியக்கூறுகளுடன் உள்ளனர். ஆய்வில், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் நோய் எண்ணிக்கைகளுக்கு இடையில் இருக்கும் வித்தியாசம் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. நீரிழிவு நோய் ஏற்படும் சாத்தியக்கூறுகள் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் சமமாகவே இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
ஆய்வு முடிவுகள் குறித்தும், மக்கள் என்ன மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.இந்த ஆய்வு முடிவுகள், பாதித்தவர்களின் எண்ணிக்கையைவிட நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு நிறைய பேரிடம் இருப்பதை நமக்கு உணர்த்துகிறது. இன்னும் சில வருடங்களில் அதிக அளவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை கூடிவிடும்.
நீரிழிவு நோயில் தொடங்கி ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற அனைத்து பிரச்னைகளும் ஏற்படுத்தும். போதிய பரிசோதனைகளால் மட்டுமே அதைக் கண்டறிய முடியும். எனவே, குறிப்பிட்ட கால அளவில் உடல் பரிசோதனை செய்துகொள்வது நோய் பாதிப்பைக் கண்டறிந்து விரைவில் சிகிச்சை அளிக்க உதவும். கார்போஹைட்ரேட் எடுத்துக்கொண்டால் புரதம், கொழுப்பு மற்றும் நார்ச்சத்து போன்றவற்றையும் சரியான விகிதத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்வதை பழகிக்கொள்ள வேண்டும். இதை குடும்பமாக அனைவரும் கடைப்பிடித்து குழந்தைகளுக்கும் அதை பழக்க வேண்டும்.