வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் இளைஞர்கள் சேர்ந்து 14 வயது சிறுவனை கொன்ற சம்பவம் தலைநகர் தில்லியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. டெல்லி போலீசார் கடந்த 22 ஆம் தேதி ஷாபாத் டெய்ரி பகுதியில் உள்ள கழிவு நீர் வாய்க்காலில் 14 வயது மதிக்கத்தக்க சிறுவனின் சடலத்தை மீட்டனர்.
பிரேதத்தை கைப்பற்றிய போலீசார் இறந்து போன சிறுவன் யார் என்பது குறித்து விசாரணையில் இறங்கினர. கடந்த ஜனவரி 19ஆம் தேதி தங்கள் மகனை காணவில்லை என்று காவல் நிலையத்திற்கு வந்த ஒரு புகாரை விசாரித்ததில் இறந்த சிறுவன் மன்ஜீத் என்று அடையாளம் கண்டு கொண்டனர். இதனையடுத்து அந்த சிறுவனின் பெற்றோரும் உடலை அடையாளம் காண்பித்து இறந்த சிறுவன் மன்ஜீத் தான் என உறுதி செய்தனர்.
இந்த சிறுவன் எதற்காக கொலை செய்யப்பட்டான் மேலும் அவனை யார் கொலை செய்தார்கள் என காவல்துறை விசாரித்ததில் அதே பகுதியைச் சார்ந்த ஹர்ஷித், விக்ரம், விபின் மற்றும் பங்கா என்ற நான்கு இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது விசாரணையில் ஹர்ஷித் மற்றும் விக்ரம் என்ற இரண்டு இளைஞர்கள் கொலை நடந்ததை ஒப்புக்கொண்டனர்.
விக்ரம் மற்றும் ஹர்ஷித் ஆகியோர் அந்தப் பகுதியில் துணிக்கடை நடத்தி வந்திருக்கின்றன. அவர்களின் கடையில் ரூபாய் 18000 மதிப்பிலான ஆடைகளை அவ்வப்போது கடனாக வாங்கி இருக்கிறான் மன்ஜீத். இது தொடர்பாக கடனை திருப்பி செலுத்துமாறு அந்த சிறுவனிடம் கேட்டபோது பொய் புகார் கொடுத்து இவர்களை மாட்டி விடுவதாக மிரட்டி இருக்கிறான் சிறுவன்.
இதனால் கோபமடைந்த அவர்கள் நண்பர்களுடன் சேர்ந்து சம்பவம் நடந்த தினத்தன்று அந்த சிறுவனை அழைத்து மிரட்டி இருக்கின்றனர். அப்போது பேச்சுவார்த்தை கைகலப்பாக மாறிவிடவே அவர்களின் கூட்டத்தில் இருந்த செண்டா என்ற இளைஞன் சிறுவனை துப்பாக்கியால் சுட்டு விட்டான். இதில் சம்பவ இடத்திலேயே அந்தச் சிறுவன் உயிரிழந்துள்ளான். இதனையடுத்து அவர்கள் சிறுவனின் உடலை வாய்க்காலில் மறைத்துவிட்டு தப்பி ஓடி விட்டனர். இது தொடர்பாக காவல்துறையை நான்கு இளைஞர்களை கைது செய்திருக்கிறது. மேலும் இந்த கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி மற்றும் மூன்று பேரை காவல்துறை தேடி வருகிறது .