காதலுக்கு இடையூறாக இருந்த பெற்ற தந்தையை காதலனோடு சேர்ந்து, தீர்த்துக்கட்ட முடிவு செய்த 16 வயது சிறுமி.
அதாவது, தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பகுதியில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருபவர் வேணுகோபால் பாண்டியன் (55). இவருக்கு உமா மகேஸ்வரி என்ற மனைவியும், இரு மகள்களும் இருக்கிறார்கள்.
இவருடைய மகளான 16 வயது சிறுமி, தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையைச் சேர்ந்த முத்து காமாட்சி (23) என்பவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த காதல் விவகாரம் வேணுகோபாலுக்கு பிடிக்கவில்லை. தன்னுடைய மகளை அவர் கண்டித்து இருக்கிறார்.
இந்த நிலையில் தான், தந்தை உயிருடன் இருந்தால், நாம் ஒன்று சேர முடியாது என்று தன்னுடைய காதலனிடம் தெரிவித்த அந்த 16 வயது சிறுமி, தந்தையை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளார்.
அதன்படி, வேணுகோபால் பாண்டியன் இருசக்கர வாகனத்தில் தன்னுடைய கடையிலிருந்து வீட்டிற்கு திரும்பி வந்த போது மூன்று பேர் கொண்ட ஒரு கும்பல் அவரை மறித்து அரிவாளால் வெட்டியது.
இதை கண்ட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதற்குப் பிறகு, அவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில், காவல்துறையினர், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், சந்தேகத்தின் அடிப்படையில், பெரியகுளம் தென்கரையைச் சேர்ந்த முத்து காமாட்சி (23), செல்வக்குமார் (23), கண்ணப்பன் (21) உள்ளிட்ட 3 இளைஞர்களை பிடித்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், காதல் விவகாரம் காரணமாக, வேணுகோபால் பாண்டியனின் 16 வயது மகளின் தூண்டுதல் பெயரில், அவரை தாக்கியதாக மூன்று பேரும் வாக்குமூலம் வழங்கி இருக்கின்றன.
இந்த காதல் விவகாரம் குறித்து, பிரச்சனை எழுந்ததால், வேணுகோபால் பாண்டியன் மகள், அவருடைய பாட்டியுடன் தங்கி இருந்தார். அப்போது ஓட்டுனரான முத்து காமாட்சி என்பவர், சிறுமியுடன் பழகி வந்தது குறித்து தெரியவந்ததால், சிறுமியின் தந்தை, மகளை இதுகுறித்து கண்டித்து இருக்கிறார் என்ற விவரமும் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் தான், முத்து காமாட்சி மற்றும் அவருடைய நண்பர்கள், மேலும் அவர்களுக்கு உதவியாக இருந்த தன்னுடைய மகளான 16 வயது சிறுமி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உமா மகேஸ்வரி பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். அதனை அடிப்படையாகக் கொண்டு, சிறுமி உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை கைது செய்துள்ளனர்.