உத்திரபிரதேச மாநிலத்தைச் சார்ந்த 19 வயது மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். உத்திரபிரதேசம் மாநிலம் மொராதாபாத் பகுதியைச் சேர்ந்த 19 வயது மாணவன் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் படித்து வந்துள்ளான்.
விடுதியில் தங்கி படித்து வந்த மாணவனின் அறை திறக்கப்படாமல் மூடியே இருந்திருக்கிறது இதனால் சந்தேகம் அடைந்த சக மாணவர்கள் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து விடுதிக்கு வந்த காவல்துறையினர் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து மாணவனின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீட் நுழைவுத் தேர்வுக்காக மாணவன் இரண்டு வருடங்களாக தயாராகி வந்ததும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை நீட் தேர்விற்கு தயாராகி வந்த மாணவர்களில் 27 பேர் தற்கொலை செய்து மரணம் அடைந்துள்ளனர். 2015 ஆம் ஆண்டிற்கு பிறகு கடந்த வருடம் நீட் தேர்வினால் அதிகமான மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.