தேர்தலுக்கு 13 மாதங்கள் உள்ளன. அதிமுக தலைமையில் பலமான கூட்டணி அமையும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி; டெல்லியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என மக்கள் நினைத்ததால் பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது. தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். ஊடகங்கள் உண்மை செய்தி வெளியிட்டால் தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்து விடும். கிருஷ்ணகிரி பாலியல் சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. வேலூரில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு நடந்த பாலியல் தொந்தரவு வேதனையளிக்கிறது.
அதேபோல, தமிழக காவல்துறையில் உயர்பதவியில் உள்ள ஏடிஜிபி தன்னுடைய உயிருக்கு ஆபத்து என்று கூறுவது அச்சத்தை ஏற்படுத்துகிறது. சிவகங்கையில் காவல்நிலையத்தில் ஒரு பெண் எஸ்ஐ தாக்கப்படுகிறார். காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை எனும்போது சாதாரண பொதுமக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது. குற்றச் சம்பவங்களில் ஈடுபவர்கள் எவ்வித அச்சமும் இன்றி குற்றச்செயல்களை செய்கின்றனர். ஒரு பொம்மை முதல்வர், திறமையற்றவர் ஆட்சி செய்வதே இதற்கு சாட்சியாகும்.
இண்டியா கூட்டணிக்கு மக்கள் சம்மட்டி அடி கொடுத்துள்ளனர். அந்த கூட்டணியில் ஒற்றுமை இல்லை. விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லை. இந்த தேர்தல் முடிவுகள் மூலம் இண்டியா கூட்டணி உள்ளதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. ஈரோடு தேர்தலில் யாரும் களத்தில் இல்லாதபோது, திமுக பெற்றது போலி வெற்றியாகும். அதிமுக கட்சி நிர்வாகிகளின் வாக்குகளை திமுக-வினரே போட்டுள்ளனர். கள்ள வாக்குகளின் மூலம் பெரிய வெற்றி பெற்றதாக சொல்கிறார்கள். 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதே தொகுதியில் என்ன நிலைமை என்பதை அந்த காலகட்டத்தில் நாங்கள் சொல்கிறோம்.
தேர்தலுக்கு 13 மாதங்கள் உள்ளன. அதிமுக தலைமையில் பலமான கூட்டணி அமையும். தேர்தல் அறிவித்த பிறகு தான் கூட்டணி குறித்து சொல்ல முடியும். நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமையுமா என்றால் எங்களைப் பொறுத்தவரை பலமான கூட்டணி அமையும் என்றார்.