சென்னை திருவொற்றியூரை சேர்ந்தவர்கள் வழக்கறிஞர் சுதா மற்றும் நசீரா பாத்திமா இவர்கள் இருவரும் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் மனுவை வழங்கினர். அதில் புது வண்ணாரப்பேட்டையில் உள்ள 60 லட்சம் மதிப்பிலான காலி நிலத்தை போலி ஆவணங்கள் மற்றும் ஆள் மாறாட்டம் மூலமாக சிலர் அபகரித்திருக்கின்றனர் ஆகவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு, நிலத்தை மீட்டு தர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக சரியான விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்வதற்கு காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்தார் அதன்படி சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் மகேஸ்வரி மேற்பார்வையில் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் போலி ஆவணம் மூலமாக நிலம் அபகரிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
ஆகவே நில அபகரிப்பு மற்றும் ஆள் மாறாட்டம் செய்ததாக திருவொற்றியூரை சேர்ந்த அமுதா என்ற அமுதவற்றுமையை(51), கத்திவாக்கத்தைச் சேர்ந்த கணேசன் (40), புது வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மன்சூர் அகமது (32) மற்றும் அதே பகுதியை சேர்ந்த இர்ஃபான் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். அதன் பிறகு அவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். அபகரிக்கப்பட்ட காலி மனை மீட்கப்பட்டது. இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.