திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே தனியார் பள்ளியில் 4-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட புகாரில் பள்ளி தாளாளரின் கணவர் கைது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே தனியார் பள்ளியில் 4-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பள்ளித் தாளாளரின் கணவர் நேற்று கைது செய்யப்பட்டார். சம்பவத்தை கண்டித்து பெற்றோர், பொதுமக்கள் பள்ளிக்குள் புகுந்து சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. மணப்பாறை அருகே உள்ள மணப்பாறைப்பட்டியிலுள்ள தனியார் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் அப்பள்ளியின் தாளாளரின் கணவர் வசந்தகுமார் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையறிந்த மாணவியின் பெற்றோர், உறவினர்கள் பள்ளிக்கு வந்து வசந்தகுமாரை கடுமையாக தாக்கி, அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து, சிறிது நேரத்தில் உறவினர்கள் உள்ளிட்டோருடன் பள்ளிக்குள் புகுந்து பள்ளி அலுவலகம், வகுப்பறை கண்ணாடிகளை உடைத்து சூறையாடினர். மேலும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த 2 கார் கண்ணாடிகளையும் உடைத்தனர். காரை கவிழ்த்து, அடித்து சேதப்படுத்தினர். மேலும், இரவில் ஆங்காங்கே மறியலிலும் ஈடுபட்டனர். அங்கிருந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த டிஐஜி வருண்குமார், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.