New Central Cabinet: நாட்டின் பிரதமராக 3வது முறையாக நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்றுள்ளார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிலையில் பிரதமர் மோடியின் புதிய அமைச்சரவையில் எந்தெந்த மாநிலங்களுக்கு எவ்வளவு இடம், எத்தனை மத்திய அமைச்சர்கள், இணை அமைச்சர், பெண் அமைச்சர்களுக்கு பதவி கொடுக்கப்பட்டுள்ளது என்று விரிவாக பார்க்கலாம்.
அமைச்சரவையில் இடம்பெற்ற முக்கிய தலைவர்கள்: மக்களவை தேர்தலில் வெற்றிபெற்ற ராஜ்நாத் சிங், அமித் ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட 72 பேர் மோடியின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். நிதின் கட்காரி, சிவராஜ் சிங் சவுகான், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், அஷ்வினி வைஷ்ணவ், பியூஸ் கோயல், மனோகர் லால் கட்டார் உள்ளிட்ட பாஜகவை சேர்ந்த 61 பேரும், குமாரசாமி, ஜித்தன் ராம் மாஞ்சி, ராம் மோகன் நாயுடு உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த 11 பேரும் இடம்பெற்றுள்ளனர்.
எந்தெந்த மாநிலங்களுக்கு எவ்வளவு இடம்? உத்தரபிரதேசத்தில் 10 பேர், பீகாரில் 8 பேர், மகாராஷ்டிராவில் 6 பேர், ம.பி., கர்நாடகா, குஜராத்தில் தலா 5 பேர், ராஜஸ்தான், ஜார்க்கண்டில் தலா 4 பேர், ஒடிசா, ஹரியானா மற்றும் ஆந்திராவில் தலா 3 பேர், தெலுங்கானா, மேற்குவங்கம், கேரளா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் தலா 2 பேர், தமிழகம், கோவா, ஜம்மு-காஷ்மீர், ஹிமாச்சல், அருணாச்சல், பஞ்சாப், உத்தரகண்ட், டெல்லியில் தலா ஒருவரும் அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்றனர்.
அமைச்சரவையில் இடம்பெற்ற 36 இணை அமைச்சர்கள்: இதேபோல், புதிய அமைச்சரவையில் எல்.முருகன், நடிகர் சுரேஷ் கோபி உள்ளிட்ட 36 இணை அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். ஜார்ஜ் குரியன், ரக்சனா கட்சே, பபித்ரா மார்கிரேட்டா, சுகந்தா மஜூம்தார், அஜர் தம்தா, பண்டி சஞ்சய் குமார், டோகன் சாஹு, கமலேஷ் பாஸ்வான், பகீரத் சிங், சதீஷ் தாஸ், ராஜ் பூஷன் சவுத்ரி, பூபதி ராஜ் சீனிவாஸ், ஜெயந்தி ராய் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
7 பெண்களுக்கு இடம்: பிரதமர் மோடியின் புதிய அமைச்சரவையில் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட 7 பெண்களுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ரக்ஷா காத்சே(மகாராஷ்டிரா), அன்னபூர்ணா தேவி (ஜார்கண்ட்), ஷோபா கரண்ட்லாஜே (கர்நாடகா), சாவித்ரி தாகூர் (மத்திய பிரதேசம்), அனுப்பிரியா பட்டேல் (உத்திர பிரதேசம்), நிமுபென் பாம்பானியா (குஜராத்) உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
ம.பி.யின் நீண்ட கால முதல்வர் மத்திய அமைச்சரானார்: மத்திய பிரதேச மாநிலத்தில் 16.5 ஆண்டுகளாக முதல்வராக இருந்த சிவராஜ் சிங் சவுகான் தற்போது முதல் முறையாக மத்திய அமைச்சராகியுள்ளார். ம.பி.யில், பாஜக சார்பில் அதிக காலம் முதல்வராக இருந்தவர் என்ற பெருமையை பெற்ற அவர், 1991-2006 வரை தொடர்ச்சியாக 5 முறை எம்.பி.யாகவும் இருந்துள்ளார். அதன்பின் ம.பி. முதல்வராக பதவி வகித்த அவர், சமீபத்தில் முடிந்த மக்களவை தேர்தலில் வெற்றிபெற்று 6வது முறையாக எம்.பி.ஆகியுள்ளார்.