நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஈவு இரக்கமில்லாமல் கணித ஆசிரியர் கொடுத்த தண்டனையால் 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆத்திரத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த காரைக்குடியைச் சார்ந்த இளையராஜா மற்றும் பாசமலர் தம்பதியின் ஒரே மகன் கவிப்பிரியன் வயது 13. இந்தச் சிறுவன் அங்குள்ள வலிவலம் தேசிகர் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்திருக்கிறான். இந்தப் பள்ளியில் கணித ஆசிரியராக இருந்து வருபவர் செந்தில் செல்வன் இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று கணித வகுப்பிற்கு ஆசிரியர் செந்தில் செல்வன் சிறிது தாமதமாக வந்திருக்கிறார். இதனால் மாணவர்கள் பேசிக் கொண்டும் ஆடிக் கொண்டும் இருந்திருக்கின்றனர் . ஆசிரியர் வகுப்பிற்கு வரும்போது வகுப்பறையில் சத்தமாக இருந்ததால் கோபமடைந்த அவர் மாணவர்களை அங்கிருந்து மைதானத்தை சுற்றி ஓடி வரும்படி தண்டனை வழங்கியிருக்கிறார் . அந்த நேரம் வெயில் அதிகமாக இருந்ததையும் பொருட்படுத்தாமல் மாணவர்கள் மைதானத்தை சுற்றிவர வேண்டும் என கண்டிப்பாக கூறியிருக்கிறார். கடுமையான வெயிலில் ஓடியதால் மூச்சிரைத்த மாணவன் கவிப்பிரியன் ஆசிரியரிடம் தன்னால் இதற்கு மேல் ஓட முடியவில்லை என மன்றாடி இருக்கிறார். அதனை பொருட்படுத்தாத ஆசிரியர் கண்டிப்புடன் எழுந்து ஓடுமாறு எச்சரித்து இருக்கிறார். இந்நிலையில் மாணவன் கவிப்பிரியன் மூச்சிரைப்புடன் ஓட முடியாமல் நெஞ்சு வலியால் சுருண்டு விழுந்துள்ளார்.
இதனைக் கண்ட ஆசிரியர் சக மாணவர்களின் சைக்கிளில் வைத்து அந்த மாணவனை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியிருக்கிறார். சைக்கிளில் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக மாணவனின் உயிர் பிரிந்து இருக்கிறது. மருத்துவமனை சென்று பரிசோதித்த போது மாணவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் கணித ஆசிரியர் செந்தில் செல்வன் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறை, ஆசிரியரிடம் தீவிரமாக விசாரணை செய்து வருகிறது. சமீப காலமாகவே ஆசிரியர்கள் மாணவர்களின் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விடும் சம்பவம் அதிகரித்து வருகிறது. ஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்க உரிமை இருக்கிறது. ஆனால் அதையே தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு கண்மூடித்தனமாகவும் கொடூரமாகவும் ஆசிரியர்கள் மாணவர்களை தண்டிக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதுபோன்ற ஒரு குரூரமான ஆசிரியரின் மனநிலை தான் இன்று நாகப்பட்டினத்தில் ஒரு 13 வயது சிறுவனின் உயிர் போக காரணமாக இருந்திருக்கிறது.