பெண்களை பிளாக்மெயில் செய்ய மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் தான் வேண்டும் என்றில்லை செல்ஃபி போதும் என நிரூபித்திருக்கிறார் சென்னையைச் சார்ந்த செல்ஃபி சைக்கோ ஒருவர். சென்னை தாம்பரத்தை அடுத்த இரும்புலியூரைச் சார்ந்த இளைஞர் ஒருவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது. இவரது மனைவி அருகில் உள்ள கோயில் ஒன்றுக்கு வாரம் இரண்டு முறை சென்று வந்திருக்கிறார். இந்நிலையில் அவரது மொபைல் போனுக்கு புகைப்படம் ஒன்று வந்திருக்கிறது. அதில் அவரது மனைவியுடன் வேறு ஒரு நபர் இருந்திருக்கிறார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர் புகைப்படம் அனுப்பிய நபரை தொடர்பு கொண்டு பேசிய போது உன் மனைவி கர்ப்பமாகவே நான்தான் காரணம் என முரணான தகவல்களைச் சொல்லி இருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர் தாம்பரம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். இந்தப் புகாரை காவல்துறை விசாரித்ததில் பல திடுக்கிடும் உண்மை சம்பவங்கள் வெளிவந்திருக்கின்றன.
இது தொடர்பான விசாரணையில் காவல்துறை சென்னை பெருங்களத்தூரை சார்ந்த புகழேந்தி என்ற 29 வயது இளைஞரை கைது செய்திருக்கிறது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பெருங்களத்தூர் கோவிலுக்கு செல்லும்போது புகழேந்திக்கும் அந்தப் பெண்மணியின் அம்மாவிற்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனடிப்படையில் சகோதரர் என்ற முறையில் இந்த பெண்மணி புகழேந்தியுடன் பேசி வந்திருக்கிறார். அதன் பிறகு புகழேந்தி நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படவே அவருடன் பேசுவதை நிறுத்தியிருக்கிறார் அந்த பெண். இதனால் ஆத்திரமடைந்த புகழேந்தி நட்பின் அடிப்படையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவரது கணவருக்கு அனுப்பி மிரட்டல் விடுத்தது தெரியவந்துள்ளது. மேலும் அவரது மொபைல் போனை காவல்துறை சோதனை செய்தபோது ஏராளமான பெண்களுடன் அவர் செல்ஃபி புகைப்படங்கள் எடுத்து வைத்திருப்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இளைஞர் வேறு எந்த பெண்ணுக்கும் மிரட்டல் விடுத்துள்ளாரா? என்பது பற்றி காவல்துறை தீவிரமாக விசாரணை செய்து வருகிறது.