தமிழகம் முழுவதும் இன்று பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இந்தி திணிப்பை எதிர்த்து தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணி மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்பொழுது இந்த ஆர்ப்பாட்டம் போராட்டமாக மாறுமா என்பது மத்திய அரசின் கையில்தான் உள்ளது. தமிழகத்தின் மொழி, கல்வி உரிமையை பறிக்கும் அரசாக பாஜக இருக்கிறது. எந்த வழியில் இந்தி திணிப்பை தமிழ்நாட்டுக்குள் கொண்டு வந்தாலும் நாங்கள் சொல்லப்போவது இந்தி தெரியாது போடா எனவும் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
ஆனால் தமிழகத்தில் தி.மு.க-வினர் நடத்தும் பெரும்பாலான சிபிஎஸ்இ பள்ளிகளில் மாணவர்களுக்கு கட்டாயமாக இந்தியை கற்றுக் கொடுப்பதாக பாஜக தொடர்ந்து ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறது. அதனை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் விதமாக தமிழக பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தார் மாநிலத் தலைவர் அண்ணாமலை. இந்த நிலையில் போராட்டமானது அனைத்து மாவட்டங்களிலும் இன்று நடைபெறுகிறது கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ள உள்ளார்.