கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் பரவி பல லட்சம் உயிர்களை காவு வாங்கியது. பலர் போதிய சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்த நிலையில், இறந்தவர்களின் சடலத்தைக் கூட எரிக்கவோ, புதைக்கவோ இடமில்லாமல் தவிக்கும் சூழல் உருவானது. இதையடுத்து, பல்வேறு கட்டுப்பாடுகளால் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், தற்போது மேலும் ஒரு தொற்று பரவி வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார் ராபர்ட் ரெட்ஃபீல்ட். அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் முன்னாள் இயக்குநரான இவர், அண்மையில் ஒரு விவாதத்தில் பங்கேற்றார். அப்போது, அமெரிக்காவில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது என்றும், பண்ணைகளில் வளர்க்கப்படும் மாடுகளுக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.
எனவே, கொரோனாவை போன்ற பெரிய தொற்றுநோய் வருவது உறுதி என்றும், ஆனால், அது எப்போது வரும் என்பதுதான் கேள்வி என்றும் அவர் கூறியுள்ளார். பறவைக் காய்ச்சல் மூலம் ஒரு தொற்றுநோய் பரவி மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தினால், அது கோவிட்-19 தொற்று நோயை விட மிகவும் ஆபத்தானதாக இருக்கும் என்று அவர் எச்சரித்துள்ளர். ”கொரோனா வைரஸ் தொற்றுநோய் பாதிப்பின்போது இறப்பு விகிதம் வெறும் 0.6% மட்டுமே.
ஆனால், பறவைக் காய்ச்சலால் இறப்பு விகிதம் 20 முதல் 50 சதவீதம் வரை இருக்கலாம். கடந்த மாதம், மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு 3-வது முறையாக அமெரிக்காவில் பதிவானது. அதே நேரத்தில் உலகம் முழுவதும் இதுவரை 15 பேருக்கு எச்5என்1 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 அமினோ அமிலங்கள் பறவைக் காய்ச்சலில் இருப்பதால், அவை மனிதர்களுக்கு சென்றடைகிறது. வைரஸ் மனிதர்களை அடைந்த பிறகு, ஒரு மனிதனிடம் இருந்து மற்றொரு மனிதருக்கு பரவுகிறது. இதனால், இந்த நோய் உலகம் முழுவதும் பரவுவதை யாராலும் தடுக்க முடியாது. இது அமெரிக்காவில் வேகமாக பரவி வருகிறது” என்று அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.
அதாவது, அமெரிக்காவில் விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு காலாவதியான கோழித் தீவனத்தை வழங்கியுள்ளனர். இதனால், அதில் இருந்து பறவைக் காய்ச்சல் வைரஸ்கள், கால்நடைகளின் உடலுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எனவே, இந்த நடைமுறை ஐரோப்பாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், காட்டுப் பறவைகள் மூலமும் பறவைக் காய்ச்சல் மாடுகளுக்கு பரவியிருக்கலாம் என்பது விஞ்ஞானிகளின் கருத்தாக உள்ளது.
Read More : கழிவுகளை சுத்தம் செய்ய மனிதர்களா..? இனி 2 ஆண்டுகள் ஜெயில் உறுதி..!! மாவட்ட ஆட்சியர் அதிரடி..!!