கள்ளக்காதல் விவகாரத்தில் மாமியாரை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த சம்பவம் தொடர்பாக மருமகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சி பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் லதா (40). இவரது மகள் சவுமியா (22). இவருக்கும் ஆரம்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த விவேக் (32) என்பவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், சவுமியா கணவர் விவேக்கை பிரிந்து கடந்த ஒரு வருடமாக தாயுடன் வசித்து வருகிறார்.
இதற்கிடையே, சவுமியாவுக்கு வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்த விவகாரம் தாய்க்கு தெரிந்தும் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்நிலையில், சவுமியா வெளியூருக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு கள்ளக்காதலனுடன் சென்றுள்ளார். இதனை அறிந்த கணவர் விவேக், சம்பவத்தன்று இரவு மாமியார் வீட்டுக்கு வந்து மனைவி எங்கே கேட்டு அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரத்தில் விவேக் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாமியார் லதாவின் கழுத்தில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த லதாவை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், லதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், மாமியாரை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த விவேக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 38-வது முறையாக நீட்டிப்பு..!! கோர்ட் அதிரடி உத்தரவு..!!