மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கொம்பாடி கிராமத்தில் வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்ததால், தனது அக்கா மற்றும் அவரது காதலனை சொந்த தம்பியே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கும்பாடி கிராமத்தில் நந்தி பெருமாள் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார். 28 வயதான இவர் கட்டிட வேலை செய்து வந்தார்.
இவரும் அதே பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த மகாலட்சுமி குடும்பத்தினர் அவரை வேறு ஒருவருக்கு மூன்றாண்டுகளுக்கு முன் திருமணம் செய்து வைத்தனர். இதனைத் தொடர்ந்து கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது பெற்றோர் வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் மகாலட்சுமி .
அப்போது மீண்டும் காதலன் சதீஷ்குமார் உடன் செல்போன் மூலம் பேசத் தொடங்கி இருக்கிறார். இதனை அறிந்த மகாலட்சுமியின் தம்பி பிரவீன் குமார்(20) இருவரையும் கண்டித்துள்ளார். இதை மீறியும் சதீஷ்குமார் மற்றும் மகாலட்சுமி தங்கள் காதலை தொடர்ந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பிரவீன்குமார் நேற்று வேலை முடிந்து வீடு திரும்பிய சதீஷ்குமாரை வழிமறித்து கொடூரமாக வெட்டி படுகொலை செய்தார். இந்த சம்பவத்தில் துண்டான அவரது தலையை எடுத்து நாடக அரங்கத்தில் வைத்திருக்கிறார்.
பின்னர் வீட்டிற்கு சென்று தனது அக்கா மகாலட்சுமியையும் கழுத்தறுத்து படுகொலை செய்த அவர் இதனை தடுக்க வந்த தாயையும் கடுமையாக தாக்கியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சதீஷ்குமாரின் அண்ணன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் காயம் அடைந்த பிரவீன்குமாரின் தாயை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் கொலை குற்றவாளி பிரவீன் குமாரும் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இரு வேறு சமூகங்களுக்கு இடையே கொலை நடந்திருப்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.