இஸ்லாமிய சிறை கைதிகளை விடுவிக்க அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர உள்ளது.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. அந்த பட்ஜெட் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது. சட்டப்பேரவையை 6 மாத கால இடைவெளிக்குள் கூட்ட வேண்டும் என்ற விதி உள்ளது. அதன்படி இன்று காலை 10 மணிக்கு அவை கூடும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவை, சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை கூடத்தில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று காலை கூடுகிறது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் தலைவர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படும். ஒரு காவேரி பிரச்சனை தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர உள்ளார்.
அதிமுக சார்பில் இஸ்லாமிய கைதிகளை விடுவிக்கக் கோரி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு பல ஆண்டுகளாக சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகள் 36 பேரை விடுவிக்க கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் இன்று இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வர உள்ளார். திமுக தனது தேர்தல் அறிக்கையில் நீண்ட காலமாக சிறையில் உள்ள இஸ்லாமிய சிறை கைதிகளை ஆட்சிக்கு வந்தவுடன் விடுதலை செய்வோம் என கூறியது. இந்த தேர்தல் வாக்குறுதி இன்று வரை நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.