அதிமுக தமிழக மக்களுக்கும் இழைக்கக் கூடிய மிகப் பெரிய துரோகமாக பாஜகவுடன் கூட்டணி அமைந்து இருக்கிறது என திமுக எம்.பி. கனிமொழி விமர்சித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; தமிழக மக்களுக்கு இழைக்கக் கூடிய மிகப் பெரிய துரோகமாக அதிமுக – பாஜக கூட்டணி அமைந்திருக்கிறது. தேர்தலில் இந்தக் கூட்டணிக்கு மக்கள் தகுந்த பாடத்தை கற்றுத் தருவார்கள். பழனிசாமிக்கு பேசக் கூடிய உரிமை கூட இல்லாமல் கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக அரசு கொண்டுவந்த மக்களுக்கு எதிரான பல்வேறு மசோதாக்களையும், திட்டங்களையும் எதிர்ப்பதாக சொன்ன அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமித் ஷாவுடன் ஒரே மேடையில் மவுனமாக அமர்ந்து, பாஜக – அதிமுக கூட்டணியை ஆமோதித்து ஏற்றுக் கொண்டதை இன்று பார்க்க முடிந்தது. அதிமுகவுக்கும் தமிழக மக்களுக்கும் இழைக்கக் கூடிய மிகப் பெரிய துரோகமாக இந்த கூட்டணி அமைந்து இருக்கிறது.
பாஜகவும், அதிமுகவும் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார்கள் என பலமுறை தமிழக முதல்வர் கூறி வந்தார். இந்தக் கூட்டணி மீண்டும் உருவாகும் என்பதை பல முறை சுட்டிக் காட்டி இருந்தார். அது இன்று உண்மை ஆகியிருக்கிறது. இது இன்று பட்டவர்த்தனமாக தெளிவாக தெரிய வந்திருக்கிறது. மக்களை வெகுநாள் ஏமாற்ற முடியாமல், கூட்டணியை இன்று வெளிப்படையாக அறிவிக்கக்கூடிய நிர்பந்தத்துக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள் என்றார்.