கள்ளச்சாராயம் மரணம் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சிபிஐ விசாரணை கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்தி உடல் நலம் பாதிக்கப்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிகிச்சை பலனின்றி கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த 40 பேர் பலியாகினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள இந்தச் சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொண்டு, இது நிகழ்ந்ததற்கான அனைத்துக் காரணிகளைக் கண்டறியவும், எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் மீண்டும் நடைபெறாமல் இருக்க, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிடவும், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் பி.கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது.
உள்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் காவல் துறை இயக்குநர் ஆகியோர் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு உடனடியாகச் சென்று, சம்பவம் குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை இரண்டு தினங்களில் வழங்க உள்ளனர். இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சிபிஐ விசாரணை கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து அண்ணாமலை எழுதிய கடிதத்தில்; தமிழக அரசும், காவல்துறையும் விசாரணை நடத்தினால் கள்ளச்சாராய விவகாரத்தில் உண்மை வெளிவராது. எனவே மத்திய அரசு சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். கள்ளச்சாராய விவகாரத்தில் தமிழக அரசும், போலீசும்தான் பொறுப்பேற்க வேண்டும். போலீசுக்கு தெரிந்தே பொதுமக்கள் புழங்கும் இடத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது.
கடந்த ஆண்டு மரக்காணம் மற்றும் செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து 30-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். பள்ளி மற்றும் காவல்நிலையம், நீதிமன்றம் அருகிலேயே கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தி.மு.க.வினர் துணையுடன் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.