தமிழக அரசு பள்ளிக்கூடங்களில் புதிதாக 9 லட்சம் மாணவ மற்றும் மாணவிகள் சேர்ந்துள்ளனர், என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து உள்ளார். சென்னையில் உள்ள அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், பள்ளியளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மற்றும் மாணவிகளுக்கு, கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பசுமைவழி சாலையில் உள்ள, தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு ரூ.3 ஆயிரம் கல்வி ஊக்கத்தொகையை மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியபோது, இந்தியாவிலேயே நம்பர் ஒன் முதலமைச்சர் என்றால் அது நம் தமிழக முதலமைச்சர் தான். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கல்விக்காக ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கடும் நிதி நெருக்கடிக்கு மத்தியில் பள்ளிக் கல்விக்காக ரூ.38 ஆயிரம் கோடியை முதலமைச்சர் ஒதுக்கியிருக்கிறார்.
தற்பொழுது தமிழக அரசு, அரசுப் பள்ளிகள் மீது அதிக கவனம் செலுத்தி வருவதன் காரணமாக, நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் 9 லட்சம் மாணவர்கள் சேர்ந்திருக்கின்றனர். இதற்கு அரசின் நல்ல திட்டங்கள் தான் காரணம். ஒவ்வொரு குழந்தைக்கென்று தனித்திறமை உள்ளது. அந்த தனித்திறனை குழந்தைகளிடம் அடையாளம் கண்டு, அதை அவர்களின் பெற்றோர் ஊக்கப்படுத்த வேண்டும். கல்வித் துறையின் பொற்காலமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சி இருந்து வருகிறது. இவ்வாறு கல்வி அமைச்சர் அன்பில் பொய்யாமொழி பேசினார்.